Space: விண்வெளியில் நடந்து செல்ல மில்லியன்களை அள்ளிக்கொடுத்த பில்லியனர்... யார் இந்த ஐசக்மேன்?

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த 41 வயது பில்லியனர் ஜாரெட் ஐசக்மேன், தனிப்பட்ட முறையில் விண்வெளியில் நடைப்பயணம் (Space Walk) செய்த முதல் மனிதர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

விண்வெளியில் நடை!

நமக்குத் தெரிந்து. பிரபஞ்சத்தில் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் உருவாக்கி வாழ்வளிப்பது பூமிதான். அதனால்தான் நாம் வாழும் கோளை தாய் என அழைக்கிறோம். பூமிக்கு வெளியில் சென்று கோடிக்கணக்கான நட்சத்திரங்களில், விண்வெளித் துகள்களில் ஒன்றாக இருந்து பூமியைப் பார்க்கும் நிகழ்வு அறிவியலால் சாத்தியப்பட்ட ஒரு மாயாஜாலம்!

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் போலரிஸ் டான் மிஷின் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது ஸ்பேஸ் எக்ஸ் மேற்கொண்டதிலேயே சவாலான பணி என்கிறனர்.

விண்வெளியின் வெற்றிடத்தில் மனிதர்களை உலாவவிடும் திட்டங்கள் இதற்கு முன்னர் அரசு சார்ந்த அமைப்புகளால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது (12 நாடுகளைச் சேர்ந்த 263 வீரர்கள் விண்வெளியில் நடந்திருக்கின்றனர்). முதன்முறையாகத் தனியார் முன்னெடுப்பில் நிறைவேற்றியிருக்கிறார் ஜாரெட் ஐசக் மேன்.

பூமியிலிருந்து 1400 கிலோமீட்டர் தூரம் செல்லும் (இதுதான் மனிதன் சென்ற அதிகபட்சத் தொலைவு) இந்த மிஷினில் ஐசக்மேனுடன் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர்கள் அன்னா மேனன், சாரா கில்ஸ் முன்னாள் அமெரிக்க விமானப்படை விமானி ஸ்காட் பொடீட் ஆகியோர் சென்றுள்ளனர்.

யார் இந்த ஐசக்மேன்?

ஷிஃப்ட்4பேமண்ட்ஸ் (Shift4Payments) என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ இவர். போலரிஸ் டான் திட்டத்துக்காக ஸ்பேஸ் எக்ஸுடன் கைகோர்த்துள்ளார்.

ஜாரெட் ஒரு தொழிலதிபர் மட்டுமல்லாமல் விமானியாகவும், கமர்ஷியல் விண்வெளி வீரராகவும் திகழ்கிறார். ஏற்கெனவே ஸ்பேஸ் எக்ஸின் முதல் விண்வெளிப் பயணத்தில் முதலீடு செய்ததுடன் அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தவும் செய்துள்ளார்.

வசதியான பெற்றோர் இருந்தாலும், தன்னுடைய 16 வயதில் ஷிஃப்ட்4பேமண்ட்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் நபருக்கு இத்தகைய சாகசங்களில் ஆர்வம் இருப்பது இயல்புதானே!

ஷிஃப்ட்4பேமண்ட்ஸ் மட்டுமல்லாமல் டார்கன் இன்டெர்நேஷனல் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஐசக்மேன். இது அமெரிக்க விமானப்படைக்கு ராணுவ விமானங்கள் வழங்குகிறது.

இவரது சொத்துமதிப்பு 15.9 ஆயிரம் கோடி ரூபாய் (1.9 பில்லியன் டாலர்கள்) எனக் கணக்கிட்டுள்ளது ஃபோர்ப்ஸ். போலரிஸ் டான் மிஷினுக்காக சில நூறு மில்லியன்கள் செலவிடப்பட்டிருக்கலாம் என்கிறது கார்டியன் வலைத்தளம். ஆனால், துல்லியமாக எவ்வளவு செலவு என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டார் ஜாரெட் ஐசக் மேன்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.