Ford : சென்னையில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க ஃபோர்டு நிறுவனம் விருப்பம்!

தமிழ்நாட்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய ஃபோர்டு நிறுவனம், மீண்டும் சென்னை ஆலையில் உற்பத்தியை தொடங்க ஆர்வம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் இருக்கும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம், ஃபோர்டு. கடந்த 2021-ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் சென்னையில் உள்ள தனது இன்ஜின் மற்றும் வாகன உற்பத்தி ஆலையை 2022-ம் ஆண்டின் காலாண்டுக்குள் மூட முடிவு செய்து, நடத்தி முடித்தது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ஃபோர்டு நிறுவன உயர் அதிகாரிகளை சிகாகோவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சர்வதேச சந்தைத் தலைவர் கே ஹர்ட்

அதில், ``தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும். சென்னையில் உள்ள ஃபோர்டின் உலகளாவிய திறன் மையத்தை விரிவுப்படுத்த வேண்டும்" என்றும் பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச சந்தைத் தலைவர் கே ஹர்ட், "சென்னையில் மீண்டும் ஏற்றுமதிகளுக்கான கார்களை உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்து, கடிதம் சமர்ப்பித்துள்ளோம்.

இந்த முடிவு தமிழ்நாடு அரசுடனான பல கட்ட சந்திப்புகளுக்கு பின்னும், முதலமைச்சர் ஸ்டாலினின் சந்திப்புக்கும் பின்னும் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஃபோர்டு பிசினஸ் குழுவில் 12,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களோடு அடுத்த சில ஆண்டுகளில் 2,500-3,000 பணியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதோடு குஜராத் சனந்தில் உள்ள இன்ஜின் தயாரிப்பு குழு, இந்தியாவில் இருக்கும் ஃபோர்டு கஸ்டமர் சப்போர்ட் குழுக்களில் பணிபுரியும் பணியாளர்களை கணக்கு எடுத்தால், உலக அளவில் இருக்கும் அனைத்து ஃபோர்டு நிறுவனங்களிலும் அதிக பணியாளர்கள் இருக்கும் இரண்டாம் இடத்தை இந்தியா பிடிக்கும்" என்று தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.