Savitri Jindal: ஹரியானா-வில் சுயேட்சையாக களமிறங்கும் இந்தியாவின் பணக்கார பெண் - யார் இந்த சாவித்ரி?
ஹரியானா சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மல்யுத்த வீரர்களின் துணையோடு தேர்தலில் போட்டியிடுகிறது.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முயன்றது. இதற்காக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையும் நடத்தின. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால் அந்த தொகுதிகள் பா.ஜ.க செல்வாக்குள்ள பகுதியில் இருப்பதாக கூறி அத்தொகுதிகளை ஏற்க மறுத்தது. மேலும் அனைத்து தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிடப்போகிறோம் என்று கூறி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் தொழிலதிபர் ஒ.பி.ஜிந்தால் மனைவி சாவித்ரி ஜிந்தால்(74) ஹிசார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஏற்கனவே சாவித்ரியின் மகன் நவீன் ஜிந்தால் குருஷேத்ரா தொகுதியில் பா.ஜ.க எம்.பியாக இருக்கிறார். எனவே தனக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கும் என்று கருதி பா.ஜ.கவிடம் வாய்ப்பு கேட்டார். ஆனால் பா.ஜ.க தலைமை சாவித்ரிக்கு ஹிசார் தொகுதியை கொடுக்க மறுத்துவிட்டது. அத்தொகுதியில் தற்போது அமைச்சராக இருக்கும் கமல் குப்தாவிற்கு மீண்டும் பா.ஜ.க வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்ரி, வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான நேற்று சுயேச்சையாக போட்டியிடப்போவதாக கூறி வேட்பு மனுதாக்கல் செய்திருக்கிறார்.
சாவித்ரி வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது அவரின் மகன் நவீன் ஜிந்தாலுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் பணக்கார பெண்மணியாக அறியப்படும் சாவித்ரி ஜிந்தால் தனது 74 வயதில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாவித்ரிக்கு 29.1 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
இதற்கு முன்னர், 2005-ம் ஆண்டு முதல் முறையாக காங்கிரஸ் சார்பாக இத்தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2009-ம் ஆண்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாகி காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ஆனால் கடந்த மார்ச் மாதம் சாவித்ரியின் மகன் நவீன் ஜிந்தால் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து சாவித்ரியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். ஆனால் அவருக்கு ஹிசார் தொகுதியை பா.ஜ.க கொடுக்க மறுத்துள்ளது.
ஹிசார் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு சாவித்ரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஹிசார் தொகுதி மக்கள் எனது குடும்பம். ஓம் பிரகாஷ் ஜிந்தால் இந்த குடும்பத்தோடு எனக்கு உறவை ஏற்படுத்தினார். அவர்களது மேம்பாட்டிற்காக பாடுபட விரும்புகிறேன். ஜிண்டால் குடும்பம் எப்போதும் ஹிசாருக்கு சேவை செய்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அவர்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்" என்று சாவித்ரி ஜிண்டால் கூறினார்.
பா.ஜ.க வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவதால் அதிருப்தி வேட்பாளராக கருதப்படுவீர்களா என்று கேட்டதற்கு, `அப்படி சொல்ல முடியாது. நான் எனது மகனுக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்தேன். நான் பா.ஜ.கவில் இன்னும் உறுப்பினராகவில்லை என்று குறிப்பிட்டார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களை பா.ஜ.க அறிவித்திருக்கிறது. நிதின் கட்கரி, அஸ்ஸாம் முதல்வர் பிஸ்வா சர்மா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, மல்யுத்த விராங்கனை பபிதா போகத் போன்றோர் கொண்ட பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


