Afg V Nz: டேபிள் ஃபேன்லாம் யூஸ் பண்ணியும் பயனில்ல- மழையால் முழுமையாக தடைபட்ட ஆப்கானிஸ்தான் டெஸ்ட்
ஆப்கானிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொள்ளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்தது. மழையின் பாதிப்பால் இப்போது அந்த டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களிலும் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக தடைப்பட்டிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைபடும் எட்டாவது டெஸ்ட் போட்டி இது.
பாதுகாப்பு காரணங்களால் ஆப்கானிஸ்தானில் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத சூழல் இருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஆப்கானிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட வருகிறோம் என உறுதியளித்துவிட்டு பின் வாங்கிய கதையெல்லாம் நடந்திருக்கிறது. அதனால் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் சில மைதானங்களைத்தான் சொந்த மைதானமாக கருதி ஆடி வருகிறது. பிசிசிஐயும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆதரவு அளித்து வருகிறது. நொய்டாவில் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறது.

2019 உலகக்கோப்பைக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணி சென்னை வந்து சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாமை நடத்தியிருந்தது. இப்படி பிசிசிஐ தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவி வருகிறது. இதற்கு சில பூகோள ரீதியிலான அரசியல் காரணங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.
இதன் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக ஆடவிருந்த டெஸ்ட் போட்டி நொய்டாவுக்கு வந்தது. நொய்டாவில் இதற்கு முன் டெஸ்ட் போட்டியெல்லாம் நடந்ததே இல்லை. ஒரு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான போதிய வசதிகள் இந்த மைதானத்தில் இல்லை என போட்டிக்கு முன்பாகவே தகவல்கள் வெளியாகியிருந்தது. பிசிசிஐ இந்த டெஸ்ட் போட்டியை நடத்த மொத்தமாக 3 மைதானங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஆப்சனாக கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில்தான் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் நொய்டாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஆனால், மழையின் பாதிப்பால் டாஸ் கூட போடப்படாமல் இந்தப் போட்டி முழுமையாக தடைப்பட்டிருக்கிறது. மைதானத்தில் ஈரப்பதத்தை போக்கும் வசதிகள் எதுவும் நொய்டா மைதானத்தில் இருந்ததாக தெரியவில்லை. மின்விசிறியெல்லாம் வைத்து மைதானத்தின் ஈரப்பதத்தை போக்க முயன்றிருக்கிறார்கள். டெல்லி மற்றும் உத்திரபிரதேச மைதானங்களில் இருந்துதான் ஈரப்பதத்தை உலர வைக்கும் கருவிகளை வாங்கியிருக்கிறார்கள்.

போட்டி தடைப்பட்டதில் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கடும் அப்செட் ஆகியிருக்கிறார். அவர் பேசியதாவது, எங்களுடைய வீரர்கள் கடுமையாக உழைத்திருந்தார்கள். நியூசிலாந்துக்கு எதிராக சவாலை எதிர்கொள்ள தயாராக இருந்தோம். தனிப்பட்ட முறையில் எனக்கு கடும் அதிருப்திதான். மைதானத்தில் செய்யப்பட்டிருந்த வசதிகளும் எங்களுக்கு அதிருப்தியைத்தான் கொடுத்தது. என டிராட் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


