Wayanad: நிலச்சரிவில் குடும்பத்தையும் விபத்தில் வருங்கால கணவரையும் இழந்த பெண்; கேரள முதல்வர் ஆறுதல்
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மாதம் கடந்தாலும் அந்த கொடும் பேரிடர் ஏற்படுத்திச் சென்ற ரணம் இன்னும் தீராத வலியைத் தந்து கொண்டிருக்கிறது. 400-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கிய நிலச்சரிவில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களின் நிலையோ இன்னும் கொடுமையானதாக இருக்கிறது. அதில் ஒருவர் தான் ஸ்ருதி. தாய், தந்தை, அண்ணன், தம்பி, தங்கை என ஒன்பது உறவுகளை நிலச்சரிவில் இழந்துவிட்டுத் தனி மரமாக நின்று கொண்டிருந்தார்.
அவருக்கு ஆதரவாக ஒரே உயிராகவும் வருங்கால கணவராகவும் இருந்தார் ஜென்சன். ஸ்ருதிக்கு ஜென்சனுடன் டிசம்பரில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த நகையும், பணமும் வீட்டோடு அடித்துச் செல்லப்பட்டது. எது நடந்தாலும் பரவாயில்லை ஸ்ருதியை கரம் பற்ற ஜென்சன் தயாராக இருந்தார். எளிமையான முறையில் திருமணத்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
அந்த நிலையில்தான், நேற்று ஸ்ருதியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத வாகன விபத்து ஏற்பட்டதில் பலத்த காயமடைந்த ஜென்சன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ஜென்சன் உயிர் பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ருதிக்கு இந்த இழப்பு பேரிடியாகத் தலையில் இறங்கியிருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் 9 பேரையும் இழந்துவிட்டுத் தவிக்கும் ஸ்ருதிக்கு ஒரே ஆதரவாக இருந்த வருங்கால கணவரும் வாகன விபத்தில் உயிரிழந்த கொடூரம் ஒட்டுமொத்த கேரளத்தையும் கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறது.
தாங்க முடியாத இந்த வேதனையை அறிந்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், "தொடர்ந்து வேதனைக்கு உள்ளாகித் தவித்து வரும் ஸ்ருதிக்கு ஒட்டுமொத்த கேரள மாநிலமும் துணையாக நிற்கும்" என ஆறுதல் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


