விருதுநகர்: கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி கூட்டுறவு பால் சங்கத்தில் ரூ.1.2 கோடி கையாடல்; ஐவர் கைது!
விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப் பதிவாளராகப் பணியாற்றி வருபவர் நவராஜ். விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட கூட்டுறவு பால் சொசைட்டிகளில் வருடாந்திர கணக்கு தணிக்கை செய்யும் பணி சமீபத்தில் நடைபெற்றது. இதில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கணக்கை தணிக்கை செய்ததில் 2020-21-ம் நிதியாண்டில் கூட்டுறவு சங்க பணம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய துணைப் பதிவாளர் நவராஜ், பணம் கையாடல் செய்தவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸார், பண மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க முன்னாள் ஊழியர்கள் 8 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 2020-21-ம் நிதியாண்டில் கொரோனா காலக்கட்டத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு விளம்பரம் செய்தல், இதர செலவு வகை கணக்குகள் அடிப்படையில் உயரதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமலேயே கூட்டுறவு சங்க பணம் ரூபாய் ஒரு கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை கையாடல் செய்துள்ளனர். இது தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைவர் உட்பட எட்டு பேரிடம் விசாரணை நடத்தினோம்.

இதில் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்களான ராஜபாளையம் குமரன் தெருவைச் சேர்ந்த முருகேசன் (63), பராசக்தி நகரைச் சேர்ந்த ராஜலிங்கம் (47), தளவாய்புரத்தைச் சேர்ந்த பொறுப்பு தலைவர் தங்கமாரியப்பன் (53), ராஜபாளையம் ஆனையூர் தெருவைச் சேர்ந்த கூட்டுறவு சங்க கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் (61), சம்பந்தபுரத்தைச் சேர்ந்த காளிராஜ் (56) ஆகிய 5 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இந்தச் சம்பவத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ் மற்றும் மேலும் ஒருவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. பணம் கையாடல் செய்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருகிறோம்" என்றனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


