வெள்ளி கோள், பூமியின் `Evil Twin என அழைக்கப்படுவது ஏன்? - ஆச்சர்யத் தகவல்கள்

வெள்ளி கிரகமும் பூமியும் இரட்டையர்களாக கருதப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இரண்டுக்குமான உருவ ஒற்றுமைதான். கிட்டத்தட்ட ஒரே அளவுடைய இரண்டு கிரகங்கள்.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள் வெள்ளிதான். இவை இரண்டு சூரிய குடும்பத்தின் ஒரே பகுதியில் இருக்கின்றன. எனவே ஒரே மாதிரியான பொருட்களால் உருவாகியிருக்கின்றன.

பூமியின் நிறையில் 81.5% கொண்டிருக்கிறது வெள்ளி. பூமியின் விட்டம் 12,756 கி.மீ, வெள்ளியின் விட்டம் 12,103 கி.மீ. இந்த அளவு ஒற்றுமை இருப்பதால் இரண்டு கோள்களையும் இரட்டையர்காளகக் கருதுவது பொருத்தமானதே.

ஆனால் வெறும் இரட்டையர்கள் என்பதுடன் இல்லாமல், வெள்ளி பூமியின் Evil Twin அதாவது தீய இரட்டை என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். தமிழ்சினிமா காதாநாயகனைப் போல இரட்டையர்களான இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கினர். வெள்ளி தீய வழியில் சென்றதாகக் கருதுகின்றனர். அல்லது பூமிக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன என்றும் கூறலாம்.

பூமி சூரிய குடும்பத்திலேயே உயிர்கள் வாழும் ஒரே கோளாக இருக்கிறது. வெள்ளி சூரிய குடும்பத்திலேயே வெப்பமான கோளாக இருக்கிறது.

வெள்ளியின் வளிமண்டலம் பூமியை விட பல மடங்கு அடர்த்தியானது. கார்பன் டை ஆக்ஸைடால் நிரம்பியிருக்கிறது. இதனால் பசுமை இல்ல விளைவுகள் ஏற்பட்டு அதிக வெப்பமான கோளாக இருக்கிறது. ஈயம் கூட உருகிவிடும் வெப்பம்!

வெள்ளியில் வெப்பம் 482.2 டிகிரி செல்சியஸ். 24 கி.மீ தடினமான மேகங்களால் மூடப்பட்டிருக்கிறது. அதுவும் சாதாரண மேகங்கள் அல்ல, கந்தக அமிலத்தாலான மேகங்கள்!

சூரிய குடும்பத்திலேயே துணைக்கு ஒரு நிலா கூட இல்லாத வெள்ளிக்கு கிரேக்கத்தின் அழகு மற்றும் காதலின் கடவுளான வீனஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது முரண்தான்!

வெள்ளியும் பூமியும் அருகருகே இருந்தாலும் ஏன் இத்தனை வித்தியாசங்கள், அதன் உருவாக்கத்தின்போது நடந்தது என்ன, என பல கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆய்வுகளை இஸ்ரோ, நாசா போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.