நீலகிரி: காலையில் டெண்டர்; மாலையில் விஜிலென்ஸ் ரெய்டு; கணக்கில் வராத 3.25 லட்சம் ரூபாய் பறிமுதல்!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகில் உள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. லஞ்ச ஒழிப்பு பிரிவு டி‌.எஸ்.பி தலைமையிலான காவல்துறையினர் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்திற்குள் நேற்று மாலை திடீரென நுழைந்துள்ளனர். அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரும் வெளியேறாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது, கணக்கில் வராத 3.25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருப்பதைத் கண்டறிந்துள்ளனர். அந்தப் பணத்தை பறிமுதல் செய்ததுடன், அலுவலகத்தில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

இது குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், "சேரங்கோடு ஊராட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லில்லி ஏலியாஸ் இருக்கிறார். கமிஷன் வாங்கிக் கொண்டு பணிகளை ஒதுக்கீடுகள் செய்வதாக தொடர் புகார்கள் வந்தன. இந்நிலையில், ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்திருக்கிறது. இதில் சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இரவு வரை சோதனை செய்தோம். கணக்கில் வராத 3.25 லட்சம் ரூபாயைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விதிமீறல் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.