Sitaram Yechury: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வருகிறார். 72 வயதான சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பைக் கவனித்து வருகிறார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மாதகாலமாக அங்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சீதாராம் யெச்சூரி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொறுத்தப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் இரண்டு நாள்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டிருந்தது. இவ்வாறான சூழலில்தான், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி தற்போது உயிரிழந்திருக்கிறார்.

இவரின் இறப்புக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ``சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறது.
மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``நண்பர் சீதாராம் யெச்சூரி, நம் நாட்டைப் பற்றி ஆழமான புரிதல் கொண்டவர் மற்றும் இந்தியா என்ற சிந்தனையின் பாதுகாவலர். எங்களின் நீண்ட விவாதங்களை இனி மிஸ் பண்ணுவேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தியை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக அவரைத் தெரியும். அவரின் மறைவு தேசிய அரசியலுக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


