கூடலூர்: தனியார் எஸ்டேட் குடோனில் சந்தன மரங்கள் பதுக்கல்... கொத்தாக தூக்கிய வனத்துறை..!

வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனவிலங்கு வேட்டை, மரக்கடத்தல் என வனத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கைது நடவடிக்கைகளில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் சந்தன மரங்களை வெட்டி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் வனத்துறை பணியாளர்கள் சம்மந்தப்பட்ட தனியார் எஸ்டேட்டில் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கிருந்த குடோன் ஒன்றில் சந்தன மரங்களை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தன மரம் பறிமுதல்

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட தனியார் எஸ்டேட்டில் சந்தன மரங்கள் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனச்சரகர் தலைமையில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் குழுவாக இணைந்து எஸ்டேடில் திடீர் சோதனை நடத்தினோம்.

அங்கிருந்த குடோன் ஒன்றின் மேல் பகுதியில் 9 சந்தன மரக்கட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தோம். அவற்றை பறிமுதல் செய்தோம்.‌தனியார் எஸ்டேட் சீனியர் மேலாளர் நிஜாமுதீன் (வயது 34), குடோன் பொறுப்பாளர் பன்னீர்செல்வம் (61), கள மேலாளர் பியர்சன் (55) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மூன்று பேரையும் கைது செய்திருக்கிறோம். மேலும், அனைவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் " என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.