`உதயநிதிக்கே என்ன பாதுகாப்பு தராங்கன்னு தெரியல - இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை
இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரத்திலுள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவற்காக அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில்தான் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை. என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியிருக்கிறார்.
உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களும், அ.தி.மு.க சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் பா.ஜ.க சார்பாக மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி, ம.தி.மு.க சார்பாக துரை வைகோ எம்.பி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தவிருக்கின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வந்திருந்தார். அப்போது பேசிய அவர், `இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை. எனக் குற்றம்சாட்டினார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் வருகை தந்து மலர் அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். 2010-ம் ஆண்டு இமானுவேல் சேகரனாருக்கு தபால்தலை வெளியிட்டு, அவரை தேசிய தலைவராக காங்கிரஸ் கட்சிதான் அறிவித்தது. தற்போது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எங்களுடைய கோரிக்கையை ஏற்று மணிமண்டபமும், திரு உருவச்சிலையும் நிறுவி, அரசு விழாவாக அறிவித்திருக்கிறார்.
இதற்கு முதலமைச்சருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் இராமநாதபுரம் காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இந்த நிகழ்வை அவர்கள் சரியாக வழிநடத்த வேண்டும். எங்களுக்கு மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சரியான பாதுகாப்பு அளித்தார்கள். ஆனால், இராமநாதபுரத்தில் எந்த ஒரு உரிய பாதுகாப்பும் எங்கள் உறுப்பினர்களுக்கு தரவில்லை. இராமநாதபுரம் காவல்துறை இவ்வளவு மெத்தனமாக இருப்பது வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒருவேளை தள்ளுமுள்ளு ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அதனால் இனி வரும் காலங்களில் காவல்துறையினர் சரியாகச் செயல்பட வேண்டும்.
நம்முடைய விளையாட்டுதுறை அமைச்சர் வருகிறார். அவருக்கே என்ன உரிய பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முக்கியமான நிகழ்வு நடக்கும்போது அதை தங்களுடைய கட்டுப்பாட்டில் நடத்த வேண்டும். அனாதைகள் வந்துவிட்டு போகிற மாதிரியாகவா மரியாதை செலுத்த வந்தவர்கள் போக முடியும்? இனிமேலாவது கூட்டத்தை கட்டுப்படுத்தி உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


