வேலூர்: ஒரே நாளில் 5 லட்சம் விதைப்பந்துகளை தயார் செய்த மாணவிகள்... பசுமையாக்கப்படும் 5 மலைகள்!
வேலூர் மாவட்டத்திலுள்ள மலைகளை பசுமைப் படர்ந்த சோலைவனமாக உருவாக்கும் நோக்கத்தோடு, ஐந்து லட்சம் விதைப் பந்துகளை ஒரே நாளில் தயாரித்து, சுற்றியுள்ள ஐந்து மலைகளிலும் தூவுவதற்கான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி. காட்பாடி `அக்சிலியம்’ கல்லூரியில் செப்டம்பர் 10-ம் தேதியான நேற்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளர் முனைவர் மேரி ஜோஸ்பின் ராணி, கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கிய ஜெயசிலி, பசுமைப் பாதுகாவலர் தினேஷ் சரவணன் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். பசுமைப் பாதுகாவலர் தினேஷ் சரவணன் தன்னார்வத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக ஆலம், அரசு, அத்தி, வேப்பம், மருது உள்ளிட்ட பத்து வகையான நாட்டு ரக விதைகளைச் சேகரித்து கொண்டுவந்தார்.
இந்த விதைகளைப் பரவலாக்கும் முயற்சியாகத்தான் அக்சிலியம் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாயிரம் மாணவிகள் மிக ஆர்வமாக முன்வந்து மண், மணல், எரு கலந்து ஒரே நாளில் ஐந்து லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்தனர்.
ஆட்சியர் சுப்புலெட்சுமி பேசும்போது, ``மாவட்ட நிர்வாகம் சார்பாக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இந்த நேரத்தில் அக்சிலியம் கல்லூரிக்கும், தினேஷ் சரவணனுக்கும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே `வெயில்’ அதிகமாக உள்ள மாவட்டம் எது என்றால், அது நம்முடைய வேலூர் மாவட்டம்தான். அதைபோல பல்வேறு பட்ட வளர்ச்சி பணிகளின் தொடர்ச்சியாக மரங்கள் குறைவாகவுள்ள மாவட்டம் எது என்றாலும், நம்முடைய மாவட்டம்தான்.
நம்முடைய மாவட்டத்தைப் பசுமையாக மாற்றுவதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் பனைமரங்களை அதிகப்படுத்துவதற்காக இந்த முயற்சிக்கு அடுத்த முயற்சியாக அதைச் செய்துகொண்டிருக்கிறோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் 10 லட்சம் மரக்கன்றுகளை 247 ஊராட்சிகளிலும் நடவுசெய்யும் திட்டமும் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடவு செய்யப்பட்டுவருகிறது. இன்று நீங்கள் தயார் செய்யும் 5 லட்சம் விதைப்பந்துகளை காய வைத்து, மரங்கள் குறைவாக இருக்கிற நம்முடைய 5 மலைகளில் தூவ இருக்கிறோம். அடுத்த ஆண்டுக்குள் அந்த மலைகளைப் பசுமை நிறைந்த மலைகளாக ஆக்குவதில் உங்கள் ஒவ்வொருவருடைய பங்கும் இருக்கிறது என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்றார் பசுமையான புன்னகையோடு.

முன்னதாகப் பேசிய பசுமை ஆர்வலர் தினேஷ் சரவணன், ``இந்த விதைகளை `ஜவ்வாது’ மலைத்தொடரைச் சேர்ந்த பழங்குடியின மக்களைக் கொண்டு சேகரித்தேன். விதைச் சேகரிப்பால் பழங்குடியின மக்களுக்கும் வருவாய் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக, வேலூர் மாவட்ட மலைகளைப் பசுமையாக்கும் முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறோம். பரவலாக்கப்படும் விதைப்பந்துகள் முளைத்து மரங்களாக மாறும் என்கிற நம்பிக்கையும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக விதைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


