சிந்து சமவெளி நாகரீகத்தை அழித்த `நிகழ்வுகள் மீண்டும் அரங்கேறியிருக்கிறதா... புதிய ஆய்வு சொல்வதென்ன?

இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மேற்கொண்ட ஆய்வில் இன்று நாம் சந்திக்கும் காலநிலை சவால்கள் போலவே, 4000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பாதிப்புகளால் நீண்ட வறட்சி ஏற்பட்டு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்திருக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.

சிந்துசமவெளி நாகரீகம் என்பது ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இரண்டு நகரங்களையும் தோலவிரா. லோத்தல், ராக்கிகர்ஹி ஆகிய முக்கிய குடியேற்றங்களை உள்ளடக்கிய பண்டைய நாகரீகம். கிமு 3300 முதல் 1300 வரை நிலைபெற்றிருந்தது. சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி இந்தியப் பண்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இந்த ஆய்வுக்காக தென்னிந்தியாவில் உள்ள குப்தேஸ்வர் மற்றும் கடப்பாவில் இருக்கும் குகைகளின் வடிவங்களை ஆராய்ந்துள்ளனர்.

சிந்து சமவெளி

அதன்மூலம் குறைந்த சூரிய கதிர்வீச்சு, எல் நினோ, தெற்கு நோக்கி நகரும் intertropical convergence zone (ITCZ - பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் மேகங்கள் மற்றும் குறைந்த அழுத்தப் பகுதி), இந்தியப் பெருங்கடல் இருமுனையின் எதிர்மறை நிலை ஆகிய காரணிகள் இணைந்து பருவமழையை வலுவிழக்கச் செய்து பண்டைய நாகரீகத்தின் அழிவுக்கு வழிவகுத்துள்ளன.

Indian Ocean Dipole (இந்தியப் பெருங்கடல் இருமுனை அல்லது IOD) : இந்தியப் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையில் மாறுபடும் ஒரு காலநிலை அமைப்பு.

இந்த ஆய்வானது quaternary international journal என்ற சர்வதேச இதழில் வெளியாகியிருக்கிறது.

நிலப்பரப்பில் குகைகள் உருவாக மழை, வெள்ளம், வறட்சி என பல்வேறு காலநிலை காரணிகள் பங்காற்றியிருக்கும். தீபகற்ப இந்தியாவில் உள்ள குகைப் படிமங்களை ஆராய்ந்து 7,000 ஆண்டுகளுக்கான காலநிலை பதிவுகளை கண்டறிந்துள்ளனர் IITM ஆராய்சிக்குழுவினர். அதன் மூலம் பிராந்திய பகுதிகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன.

காலநிலை மாற்றம்
IITM குழுவின் தலைவரான நவீன் காந்தி, "இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இன்று பருவமழையை பாதிக்கும் இதே காலநிலை முறைகள் (Climate patterns) 4000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாகரீகத்தின் தலைவிதியை மாற்றியமைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

intertropical convergence zone - மழை பெய்யும் பகுதி தெற்கு நோக்கி நகர்ந்ததால் சிந்து சமவெளி மழைப் பொழிவை இழந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிலையை அடைந்ததால் கிழக்கு இந்தியப் பெருங்கடல் குளிர்வடைந்து பருவமழை மேலும் பலவீனமடைந்தது. ஈரப்பதம் சிந்துசமவெளி பகுதிக்குச் செல்வது தடைபட்டது.

இந்தக் காரணிகளுடன் குறைந்த சூரிய கதிர்வீச்சு மற்றும் எல் நினோ இணைந்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது என்கிறது ஆய்வு. ஒரு பெரும்பாதிப்பை ஏற்படுத்த பல்வேறு காலநிலை காரணிகள் ஒன்றுபட்டதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.