மகாராஷ்டிரா: பாஜக தலைவரின் மகன் கார்... தாறுமாறாக ஓட்டியதில் 3 கார்கள் சேதம்! என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவம் தொடர்கதையாகவே உள்ளது. செய்திகளிலும் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே மகனின் ஆடி கார் நள்ளிரவில் பீர்பாரில் இருந்து வெளியே வந்தது. அப்போது மற்ற கார்கள் மீது இடித்துக்கொண்டது. இதனால் கார்கள் மற்றும் வாகனங்கள் ஒன்றோன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் இரண்டாவது தலைநகரமாக கருதப்படும் நாக்பூரின் ராம்தேஷ்பாத்தில் இருக்கும் பீர்பார் ஒன்றிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு வெளியில் வந்தவர்கள் தங்களது ஆடி காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்ற போது மற்றொரு கார் மீது இடித்தனர்.
இதில் அந்த காரில் இருந்த இரண்டு பேர் காயம் அடைந்தனர். அதோடு, ஆடி கார் நிற்காமல் வேகமாகச் சென்ற போது சாலையில் வேறு சில கார்கள் மீதும் மோதியது. இதனால் சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இறுதியாக ஒரு வாகனத்தின் மீது மோதி, கார் மேம்பாலம் அருகில் நின்றது.
அந்த காரில் இருந்த இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய ஆடி கார் பா.ஜ.க மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே மகன் சங்கேத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் காரை ஓட்டி வந்த அர்ஜூன் மற்றும் ரோனித் ஆகியோர் பிடிபட்டனர். பா.ஜ.க தலைவர் மகன் இல்லை. இதில் அர்ஜுன் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. முதலில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கார் பிடிபட்டது.
இடைப்பட்ட தூரத்தில் கார் சென்ற போது பா.ஜ.க தலைவரின் மகன் சங்கேத் தப்பித்து சென்று இருக்கவேண்டும் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் குற்றம் நடந்த இடத்தில் சங்கேத் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ``போலீஸார் நேர்மையான முறையில் விசாரிக்கவேண்டும். எந்த போலீஸ் அதிகாரியிடமும் பேசவில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். கார் எனது மகன் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
துணை கமிஷனர் ராகுல் கூறுகையில், ``காரின் நம்பர் பிளேட் கூட கழற்றப்பட்டு சீட் இருக்கைக்கு கீழே போடப்பட்டு இருந்தது. நாக்பூர் நகரின் மையப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் 3 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் சேதம் அடைந்துள்ளது. பிடிபட்ட இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறது" என்று தெரிவித்தார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


