Kangana Ranaut: மும்பையில் சர்ச்சைக்குள்ளான பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்ற கங்கனா ரனாவத்
மும்பை பாந்த்ரா பகுதியில் பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நடிகர் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பாந்த்ரா பாலிஹில் பகுதியில் உள்ள நர்கீஸ் தத் சாலையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒரு பங்களா வீடு இருந்தது. மூன்று மாடிகள் கொண்ட அந்த வீட்டை கங்கனா 2017ம் ஆண்டு ரூ.20 கோடிக்கு வாங்கினார்.
அதில் கீழ் தளம் மற்றும் இரண்டாவது மாடியில் கங்கனா ரனாவத் சில மாற்றங்களை செய்து அதனை தனது வீடு மற்றும் அலுவலமாக பயன்படுத்தி வந்தார். 2020ம் ஆண்டு கங்கனா சட்டவிரோதமாக வீட்டில் மாற்றங்கள் செய்து இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸ் அனுப்பியதோடு புல்டோசருடன் வந்த மாநகராட்சி ஊழியர்கள் மாற்றியமைக்கப்பட்ட பகுதியை இடித்தனர். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிராக கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடையுத்தரவு வாங்கினார். அப்போது மும்பை போலீஸார் மற்றும் மாநகராட்சி குறித்து கங்கனா கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். வீடு வாங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திடீரென கங்கனா தனது வீட்டை விற்பனை செய்துவிட்டார். 20 கோடிக்கு வாங்கிய வீட்டை 32 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். 3075 சதுர அடி கொண்ட அந்த வீட்டை காமாலினி ஹோல்டிங் என்ற நிறுவனம் விலைக்கு வாங்கி இருக்கிறது.

இதற்காக அந்நிறுவனம் ரூ.1.92 கோடியை முத்திரை தீர்வையாக செலுத்தி இருக்கிறது. பா.ஜ.க சார்பில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா சமீபத்தில் மும்பையில் சொந்தமாக அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு அலுவலகத்தை விலைக்கு வாங்கினார். அரசியல்வாதியாகி இருப்பதால் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொள்ளப்போவதாக கங்கனா கூறினாலும் சமீபத்தில் புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதோடு அவர் நடித்துள்ள எமெர்ஜென்சி படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் சில பகுதிகளை வெட்டிவிட்டு ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


