Rashmi: ரூ.179 கோடி முறைகேட்டை மறைக்க பொய் புகார்? - ரெலிகெர் நிறுவன பெண் தலைவர் ரேஷ்மி மீது வழக்கு
ரெலிகெர் என்டர்பிரைசஸ் நிறுவனமும், தாபர் நிறுவனமும் மருந்து, பற்பசை போன்ற நுகர்வோர் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன. ரெலிகெர் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக இருப்பவர் டாக்டர் ரேஷ்மி சலுஜா. இதே நிறுவனத்தில் தாபர் நிறுவன உரிமையாளர்கள் மொஹித் பர்மன், அமித் பர்மனுக்கு பங்குகள் இருக்கிறது.
ரெலிகெர் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் வைபவ் கவாலி என்பவர் பர்மனுக்கு எதிராக கோர்ட் மூலம் ஒரு வழக்கை பதிவு செய்து இருக்கிறார். ரெலிகெர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் மால்விநிந்தர் மோகன் சிங், சிவிந்தர் மோகன் சிங் ஆகியோர் தாபர் நிறுவனத்தின் பர்மன் தூண்டுதலின் பேரில் ரெலிகெர் நிறுவனத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், ரெலிகெர் நிறுவனத்தை கைப்பற்ற முயன்றதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து ஆரம்பத்தில் போலீஸில் நேரடியாக சென்று புகார் கொடுத்தார். ஆனால் புகார் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதையடுத்து மும்பை குர்லா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து அதன் மூலம் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்ய வைத்தார் வைபவ். இது குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில் இப்புகார் குறித்து அமலாக்கப்பிரிவும் தனியாக விசாரித்தது. விசாரணையில் வைபவ் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆவணப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
மேலும், டாக்டர் ரேஷ்மி சொன்னபடி தான் செயல்பட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்காக ரேஷ்மியும் மற்றவர்களும் வைபவிற்கு ரெலிகெர் நிறுவனத்தின் 500 பங்குகள் வாங்க ரூ.1.2 லட்சம் கொடுத்துள்ளனர். அதோடு 80 ஆயிரம் கூடுதலாக கொடுத்துள்ளனர்.
போலீஸில் புகார் கொடுத்தபோது அதனை போலீஸார் பதிவு செய்ய மறுத்தவுடன் கோர்ட் மூலம் அணுகும்படி ரேஷ்மிதான் தனக்கு உத்தரவிட்டதாகவும் வைபவ் தெரிவித்துள்ளார். வைபவ் வங்கி கணக்கிலும் பணம் வந்ததற்காக ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் டாக்டர் ரேஷ்மி மற்றும் அவரது ரெலிகெர் அதிகாரிகள் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதோடு ரேஷ்மியும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ரெலிகெர் நிறுவனத்தில் ரூ.179 கோடியை வேறு நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றி இருக்கின்றனர். இந்த நிதி முறைகேட்டை மறைக்க இது போன்று பர்மன் மீது ரேஷ்மி பொய்யான புகார் கொடுக்க செய்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


