Apple Event 2024: அதிவேக சிப், அதே மாடல், வியக்கும் கேமரா, Ai வசதிகள் -ஆப்பிள் ஈவென்ட் ஹைலைட்ஸ்

நேற்று இரவு நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் புதிய 16 சீரிஸ் ஐபோன்கள், 10 சீரிஸ் ஆப்பிள் வாட்ச், வாட்ச் அல்ட்ரா 2, iOS18 உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நான்காவது ஜெனரேஷன் புதிய ஏர்பாட்ஸ், ஐபோன் 16 சீரியஸ், ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ், ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இந்த ஆப்பிள் ஈவென்ட்டில் அறிமுகமாகியிருக்கிறது. A18 ப்ரோ, அனைத்திலும் ஆக்‌ஷன் பட்டன், கேமரா கண்ட்ரோல், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் என நேற்றைய ஆப்பிள் ஈவென்ட்டில் என்னென்ன அறிமுகமாகியிருக்கின்றன, அவற்றில் என்னவெல்லாம் ஸ்பெஷல் என்பதைப் பார்ப்போம்!

Apple Event 2024

நான்காவது ஜெனரேஷன் புதிய ஏர்பாட்ஸ்களான ஏர்பாட்ஸ் 4, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஆகியவை அறிமுகமாகியுள்ளது. இவற்றில் புதிய H2 வகை சிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான பேட்டரி பேக்கப், மேருகேற்றப்பட்டிருக்கும் இசையின் தரம், USB C சார்ஜிங், 360 டிகிரியில் நிறைந்து கேட்கும் Spatial Audio தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.3 என சிறியச் சிறிய விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு இந்தப் புதிய ஏர்பாட்ஸில் வந்துள்ளது. ஏர்பாட்ஸ் 4 மாடல்களில் வெளிச்சத்தம் கேட்காமல் இருக்கத் தனி மாடல் வெளியாகியுள்ளது.

ஏர்பாட்ஸ் 4 -ன் விலை ரூ.12900, வெளிச் சத்தத்தை நீக்கும் வசதியுடன் இருக்கும் ஏர்பாட்ஸ் 4 -ன் விலை ரூ.17900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் ப்ரோ 2வின் விலை ரூ.24,900. இதில் வெளிச்சத்தத்தை நீக்கும் தொழில்நுட்பம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடல்கள் புதிய புதிய நிறங்களில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ.59,990.

ஏர்பாட்ஸ் 4 ஜெனரேஷன்

siri சப்போர்ட், தலையை ஆமாம் என்று மேலும் கீழும் ஆட்டினால் அழைப்புகள் ஏற்கப்படும், இடதும் வலதும் வேண்டாம் என்று ஆட்டினால் நிராகரிக்கப்படும்என இப்படி சின்னச் சின்ன ஜிகினா வேலைகள் AI மூலம் இந்தப் புதிய 4 ஜெனரேஷனில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ்

இந்தப் புதிய ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸில் இன்னும் அதிகமான வெளிச்சம் கொண்ட புதிய OLED திரைக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஸ்டைன்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலுக்குப் பதிலாக டைட்டானியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வாட்சின் எடையை இறகு போலாக்கிவிடுகிறது. மெலிதான டிசைன், முன்பதை விடவும் பெரிய திரைதான் இதன் புதிய அப்டேட். மற்றபடி தூக்கத்தைக் கண்காணிக்கும் புதிய Sleep Apnea என்ற அம்சம், கூடுதல் பேட்டரி பேக்கப், புதிய நிறங்கள், இன்னும் தெளிவான ஸ்பீக்கர், மைக் உள்ளிட்டவை இதில் புதியாக இடம்பெற்றுள்ளன.

அலுமினியம், டைட்டானியம் என இரண்டு மெட்டீரியல்களில் இது வந்துள்ளது. இரண்டிற்கும் தனித்தனி விலை. ரூ.46,900 ஆரம்பமாகி ரூ.79,900வரை இந்த புதிய ஆப்பிள் வாட்ச் 10 சீரியஸ் இந்திய மார்க்கெட்டில் இறங்கியுள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ராவில் புதிய மூன்றாவது ஜெனரேஷன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதே 2வது ஜெனரேஷனுடன் புதிய டைட்டானியம் கருப்பு நிற வாட்ச் மட்டும் வந்திருக்கிறது.

புதிதாக வந்திருக்கும் ஐபோன் 16 சீரியஸில் புதிய A18 ப்ரோ பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. கேமராவில் புதிய அம்சங்கள், ஆப்பிள் இன்டலிஜெண்ட்ஸ் தொழில்நுட்பம் மூலம் புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கேமராவைப் பொருத்தவரை பல புதிய சிறப்பம்சங்கள், போட்டோவை எடிட் செய்யப் பல புதிய வசதிகள் செயற்கை நுண்ணறிவு மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கேமராவின் இடம் மாற்றபட்டு மேலும் கீழுமானப் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர போன் 16 சீரியஸ் மாடல்களுக்கும், பழைய ஐபோன் 15 சீரியஸ் மாடல்களுக்கு பெரிதாக எந்தவொரு மாற்றமும் இல்லை. சின்னச் சின்ன கிமிக் சிறப்பம்சங்கள் மட்டும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 ப்ளஸ் வேரியண்ட் இரண்டிலும் நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளும் ஆக்‌ஷன் பட்டன், ஐலேண்ட் டிஸ்ப்ளே, கேமரா கண்ட்ரோல் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்திருப்பது இதன் ஸ்பெஷல்.

ஐபோன் 13 சீரியஸின் முந்தைய மாடல்களை வைத்திருப்பவர்கள் மற்றும் புதிய ஐபோனை வாங்க நினைப்பவர்கள் மட்டுமே இந்த ஐபோன் 16 சீரியஸை வாங்கலாம். மற்றபடி இந்த நேரத்தில் விலைக்குறையும் ஐபோனின் 14, 15 சீரியஸை வாங்குவதே சிறந்தது.

ஐபோன் ப்ரோ மற்றும் மேக்ஸில் A18 ப்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது இன்னும் அதிக ஆற்றலுடன் ஐபோனை இயங்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. LTPO Super Retina XDR OLED உடன் 120Hz மோஷன் 6.3 இன்ச் கொண்ட கொஞ்சம் பெரிய டிஸ்ப்ளே, புதிய மேம்படுத்தப்பட்ட 48MP Fusion camera,  4K120 fps வீடியோ ரெக்கார்டிங்,  48MP Ultra Wide camera, கூடுதல் பேட்டரி பேக்கப், பல புதிய Ai சிறப்பம்சங்கள், புதிய நிறம் கொண்ட வேரியண்ட்கள் என பல புதிய அம்சங்கள் இந்த ஐபோன் ப்ரோ மற்றும் மேக்ஸில் அறிமுகமாகியிருக்கிறது.

விலை:

ஐபோன் 16:  128GB- ₹79,900/-, 256GB- ₹89,900/-, 512GB- ₹1,09,900/-

ஐபோன் 16 ப்ளஸ்: 128GB- ₹89,900/-, 256GB- ₹99,900/-, 512GB- ₹11,9,900/-

ஐபோன் 16 ப்ரோ: 128GB: ₹1,19,900/-, 256GB: ₹1,29,900/-, 512GB: ₹1,49,900/-, 1TB: ₹1,69,900-

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்: 256GB: ₹1,44,900/-, 512GB: ₹1,64,900/-, 1TB: ₹1,84,900/-

Apple-Intelligence

ஆப்பிள் இண்டலிஜெண்ட்ஸ் என்ற பெயரில் தனது செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். கட்டுரை எழுதித் தருவது, அதற்குத் தேவைப்படும் புகைப்படங்களைத் தானே உருவாக்குவது, போட்டோக்களைப் பல வகையில் எடிட், நீக்குதல் உள்ளிட்டவகளைச் செய்வது, மெசேஜ்களில் இருக்கும் சாராம்சத்தை மட்டும் எடுத்துக் காட்டுவது, எமோஜிக்களை உருவாக்குவது, siri மூலம் குரலை மட்டும் வைத்து இன்னும் சிறப்பாக இயங்குவது, கால் ரெக்கார்டிங் உள்ளிட்ட பல வித்தைகளைச் செய்கிறது இந்த ஆப்பிள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம். இது புதிய ios 18 சார்ட்வேர் அப்டேட்டில் முழுமையாக வரவிருக்கிறது.!

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Loading…

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.