MONKEYPOX: குரங்கு அம்மை என்கிற Mpox | Dos & Donts... முழுமையான மருத்துவ விளக்கம் | Explained
கொரோனா வைரஸ் சீனாவில் பரவ ஆரம்பித்த செய்தியை வாசிக்கையில், அது இந்தளவுக்கு உலகை அச்சுறுத்தும் என்று யாரும் யோசித்திருக்க மாட்டோம். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ மற்றும் அதன் அண்டை நாடுகளில் குரங்கு அம்மை பரவிய செய்திகளை வாசிக்கையிலும், ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது கொள்ளை நோய்கள் வருவது சகஜம் என்றே வளர்ந்த நாடுகள் நினைத்திருந்தன. 2022 வரை இதுதான் நிலைமை. ஆனால், இந்த வருடம் (2024) நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், உலக சுகாதார அமைப்பு `குரங்கு அம்மை தொற்றை அவசர நிலையாக அறிவித்துவிட்டது. அதையொட்டி, குரங்கு அம்மை பரவி வரும் நாடுகளுக்கு சென்று வந்த இந்தியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்கிற பரிசோதனைகளை இந்திய அரசும் முன்னெடுத்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் குரங்கு அம்மை அறிகுறியுடன் இந்தியா வந்த ஒருவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குரங்கு அம்மை வைரஸ் பற்றிய தகவல்கள், அது மனிதர்களிடையே எப்படி பரவுகிறது, அதன் அறிகுறிகள், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பனவற்றைப்பற்றி இங்கே முழுமையான விளக்கம் தருகிறார் பொது நல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா.
எம் பாக்ஸ் அல்லது குரங்கு அம்மை ஆப்பிரிக்க நாடான காங்கோவிலும், அதன் அருகே இருக்கும் நாடுகளிலும் அடிக்கடி வந்துபோகிற கொள்ளை நோய்தான். அதனால், வளர்ந்த நாடுகள் குரங்கு அம்மை தொற்று குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவில்லை. அதற்கான மருத்துவத் தீர்வுகளையும் பெரிய அளவில் தேடவில்லை. ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு குரங்கு அம்மைக்குக் காரணமான வைரஸில் சில மரபணு மாற்றங்கள் நிகழ, அந்த வைரஸ் வேகமெடுத்து காங்கோ நாட்டையும் தாண்டி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியது. விளைவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவியது. அதில் சில நூறு பேர் மரணமும் அடைந்தனர்.
இதன் பிறகு, உலகம் பயந்துபோய் எம் பாக்ஸ் வைரஸை உற்றுநோக்க ஆரம்பித்தது. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆராய்ச்சிகளின் முடிவில், எம் பாக்ஸ் வைரஸில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன என்றும், முதல் வகை வீரியம் அதிகமான க்ளாடு ஒன்று (clade I), இரண்டாம் வகை சற்று வீரியம் குறைந்த க்ளாடு இரண்டு (clade II) என்று கண்டறியப்பட்டது.
க்ளாடு ஒன்றில் Ia and Ib என 2 வகைகள் இருக்கின்றன. க்ளாடு இரண்டிலும் IIa and IIb என 2 வகைகள் இருக்கின்றன. 2022-2023 இடைப்பட்ட காலத்தில் பரவியது க்ளாடு இரண்டைச் சேர்ந்த வைரஸ். இது சற்று வீரியம் குறைந்தது என்பதால், பாதிக்கப்பட்டவர்களில் 0.2 சதவிகிதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஆனால், தற்போது காங்கோவில் பரவிக்கொண்டிருக்கும் எம் பாக்ஸ், வீரியம் அதிகமாக க்ளாடு ஒன்றைச் சேர்ந்த Ib வகையைச் சேர்ந்தது. இதைவிட பயம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், சில மரபணு மாற்றங்கள் காரணமாக, இந்த வைரஸ் முன்பைவிட மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருக்கிறதாம். இதனால், பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 5 சதவிகிதத்தினர் மரணமடைந்துக்கொண்டிருக்கிறார்கள்.
மரபணு மாற்றங்கள், அதனால் ஏற்படுகிற தொற்றின் வேகம், தொடர்ந்து வரும் மரணங்கள்பற்றி நமக்கெல்லாம் கொரோனா இரண்டாம் அலை ஏற்கெனவே புரிய வைத்திருக்கிறதுதானே... அதனால்தான், உலக சுகாதார அமைப்பு இதை அவசர நிலையாக அறிவித்தது. உலக நாடுகளும் அச்சத்தில் இருக்கின்றன.
எப்படி பரவுகிறது?
க்ளாடு இரண்டு வகை வைரஸ், தன்பாலின சேர்க்கையாளர்கள் மத்தியிலும், ஆண் மற்றும் பெண் இருபாலினச் சேர்க்கையாளர்கள் மத்தியிலும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. க்ளாடு ஒன்று, பாதுகாப்பில்லாமல் செக்ஸ் வைத்துக்கொள்பவர்களிடம் கண்டறியப்பட்டது என ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், தற்போது இருமும்போதும் தும்மும்போதும்கூட பரவி வருகிறது. உடலோடு உடல் உரசுமாறு இருக்கும்போதும் பிறருக்குப் பரவும் என்பதால், அரசாங்கங்கள் மட்டுமல்லாமல், தனி மனிதர்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

குரங்கு அம்மையின் அறிகுறிகள்
உடம்பில் சிவப்புத்திட்டுக்கள்
காய்ச்சல்
தொண்டைப்புண்
தலைவலி
தசைவலி
முதுகு வலி
எனர்ஜி குறைவாக உணர்வது
நிணநீர் கணுக்களில் வீக்கம்
இந்த அறிகுறிகளில் சிலருக்கு, காய்ச்சல் வரலாம். சிலருக்கு தொண்டையில் புண் வரலாம். சிலருக்கு உடல்வலியாக வெளிப்படலாம். இதில், சிவப்புத்திட்டுக்கள் முகத்தில் தொடங்கி, உடல் முழுவதும் பரவி, உள்ளங்கை, உள்ளங்கால்கள் வரை நீளும். சிலருக்கு பாலியல் உறுப்பிலிருந்தும் உடல் முழுக்க பரவ ஆரம்பிக்கலாம். இது ஆரம்பத்தில் தட்டையான புண்போல இருக்கும். பிறகு அரிப்பு, வலி என தொந்தரவு கொடுக்கும். பிறகு கொப்புளமாக மாறும். வைரஸின் தீவிரம் குறையும்போது, இந்தக்கொப்புளம் அப்படியே அழுந்தி, காய்ந்து போகும். தற்போது இருமும்போதும் தும்மும்போதும்கூட இந்த வைரஸ் பரவுகிறது என்பதால், கொப்புளம் காயும் வரைக்கும் பாதிக்கப்பட்டவர் தொற்றை பரப்பிக்கொண்டிருப்பார் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தற்போது பரவும் க்ளாடு ஒன்று Ib வகையில், இத்தகைய கொப்புளங்கள் இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றியோ அல்லது மலவாயிலோ வருகிறது என்பதால், பாதிக்கப்பட்டவர் சொல்லாமல் இருந்தால், அவரால் மற்றவர்களுக்கு பரவவும் வாய்ப்பிருக்கிறது என்பது நம் முன்னே இருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனால், பாதிக்கப்பட்டவர்கள், குரங்கு அம்மையின் அறிகுறிகளில் ஏதோவொன்று தென்பட்டாலும், உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவ உதவியை நாட வேண்டும்.
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
கர்ப்பிணிகள், வயதானவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பவர்கள்.
இவர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. இருமல், தும்மல் வழியே ஏற்படும் நோய்ப்பரவலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் உதவும்.
அறிமுகமில்லாதவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு, தொற்றை ஏற்படுத்தும் அல்லது தொற்றுப் பரவலை அதிகப்படுத்தும் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது.
பல ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு தொற்றுப் பரவும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எம் பாக்ஸ் எத்தனை நாள்களில் குணமாகிறது?
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் 2 முதல் 4 வாரங்களுக்குள் குணமடைந்து விடுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை...
உடனே உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
காற்றோட்டமான அறையில் இருங்கள்.
உடலில் இருக்கிற கொப்புளத்தைத் தொட்டவுடன் கைகளை சோப்புப் போட்டு நன்கு கழுவுங்கள்.
உங்கள் அருகில் மற்றவர்கள் வரும்போது, அந்தக் கொப்புளத்தை துணியால் மூடி வையுங்கள்.
முகக்கவசம் அணிந்திருங்கள்.
வாய்ப்புண், தொண்டைப்புண் இருந்தால், உப்பு நீரால் கொப்பளியுங்கள்.
உடலில் புண் இருந்தால், பேக்கிங் சோடா அல்லது எப்சம் உப்புகளுடன் சூடான குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனையைக்கேட்டு பாராசிட்டமால் ((acetaminophen or ibuprofen) எடுத்துக்கொள்ளுங்கள்.
செய்யக்கூடாதவை
கொப்புளங்களை கீறுவதோ, உடைப்பதோ கூடாது. இது கொப்புளங்கள் காய்வதை மெதுவாக்கும். அல்லது வைரஸ் உடலின் வேறு பகுதிகளுக்கு பரவுவதை வேகமாக்கும்.
கொப்புளங்கள் குணமாகி, அந்தப்பகுதியில் புதிய தோல் வரும்வரைக்கும் அந்தப்பகுதியில் ஷேவ் செய்யாமல் இருப்பது நல்லது. இதன் காரணமாகவும் வைரஸ் உடலின் வேறு பகுதிகளுக்கு பரவும்.
திருமணமானவர்களுக்கு ஒரு தகவல்!
தம்பதியர் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது காண்டம் பயன்படுத்தினால், அவர்கள் அறியாமல் எம் பாக்ஸ் வைரஸ் இருந்தாலும், அது பரவுகிற அபாயத்தைக் குறைக்கலாம். என்றாலும், தோலில் இருந்து தோலுக்கு அல்லது வாயிலிருந்து தோலுக்குப் பரவுவதை தடுக்க முடியாது. அதனால், குரங்கு அம்மை வந்தவர்கள், குணமடைந்தப்பிறகும் 12 வாரங்களுக்கு ஆணுறைகளைப் பயன்படுத்துவதே பாதுகாப்பு.
கவனமாக இருப்போம்... குரங்கு அம்மையைத் தவிர்ப்போம்... மீறி வந்தாலும், மருத்துவ உதவியுடன் மீள்வோம்..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


