GOAT: விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்த படங்கள் என்னென்ன தெரியுமா? - லிஸ்ட் இதோ!
விஜய் நடித்திருக்கும் தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கேமியோ, சப்ரைஸ் எலமென்ட் எனப் பல விஷயங்களால் நிறைந்திருக்கிறது கோட். முக்கியமாக மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இத்திரைப்படத்தின் காட்சிப்படுத்தியிருக்கிறது படக்குழு.
விஜய்யின் கரியர் தொடக்கத்தில் அவருடன் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்திருக்கிறார் விஜயகாந்த். இப்படத்தில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் அவர் நடித்திருப்பார். இதே போலப் பல நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கேமியோ ரோலில் நடித்து படத்தை வெற்றி பெறச் செய்ய உதவியிருக்கிறார் விஜயகாந்த். அவர் கேமியோ ரோலில் களமிறங்கி அசத்திய திரைப்படங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வங்கால கடலே
இயக்குநர் ராம நாராயணன் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருந்த திரைப்படம் எங்கள் குரல். இத்திரைப்படம் 1985-ல் வெளியானது. இதுதான் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்த முதல் திரைப்படமும்கூட. இதன் பிறகு இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவான மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் கடந்த 1987-ம் ஆண்டு வெளியானது. விஜயகாந்த் மட்டுமல்ல ரஜினி, சத்யராஜ் என மூவரும் இப்படத்தில் கேமியோ செய்திருப்பார்கள். நம் செவிகளுக்கு மிகவும் பரிச்சயமான வங்கால கடலே பாடலில்தான் இவர்கள் மூவரும் கேமியோவில் வருவார்கள்.
முரளி, குஷ்பு நடித்திருந்த இரவு சூரியன் படத்திலும் கேமியோ ரோலில் வந்திருப்பார் விஜயகாந்த். சரத்குமார் நடிப்பில் 1992-ல் வெளியான தாய் மொழி படத்திலும் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் என்ற பாத்திரத்தில் விஜயகாந்த் கேமியோ செய்திருப்பார். இதன் பிறகு 1992-ல் விஜய்யுடன் செந்தூரப்பாண்டி படத்திலும் நீண்ட கேமியோ ரோலில் நடித்திருப்பார். விஜய்யை மக்களிடம் பரிச்சயமாக்குவதற்கு இப்படத்தில் நடித்தார் விஜயகாந்த். இதே போல சூர்யாவின் கரியர் தொடக்கத்திலும் முக்கியமான உதவியைச் செய்திருக்கிறார் விஜயகாந்த். ஆம், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான பெரியண்ணா படத்திலும் நீண்ட கேமியோ ரோலில் நடித்திருப்பார்.
விஜய்காந்த் - சூர்யா
எங்கள் குரல் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ராம நாராயணன் இயக்கிய விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்திருப்பார். அப்படத்தில் விவேக்கிடம் கதைகேட்கும் நபராக விஜயகாந்த்தாகவே இதில் நடித்திருப்பார். நடிகர் அருண் பாண்டியன் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான தேவன் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். பெரியண்ணா படத்திற்குப்பிறகு மீண்டும் சூர்யா நடித்த படத்தில் கேமியோ செய்தார் விஜயகாந்த். நடிகர் மற்றும் இயக்குநர் சிங்கம்புலி இயக்கத்தில் உருவான மாயாவி படத்தில் விஜயகாந்த்தாகவே கேமியோ செய்திருப்பார்.
விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமான சகாப்தம் திரைப்படத்திலும் கேமியோ ரோலில் வந்து அட்டகாசமான சண்டைக் காட்சியில் நடித்திருப்பார். சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கிய விஜயகாந்த் ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகுத் தனது மகனுக்காக இதில் கேமியோ செய்தார்.
மொத்தமாக 10 திரைப்படங்களில் விஜய்காந்த் கேமியோ செய்திருக்கிறார். ஆனால் அவர் கேமியோ ரோலில் நடித்த எந்த திரைப்படத்திற்கும் சம்பளமென எதையும் வாங்கவில்லை என்பதுதான் இதில் முக்கியமான ஒன்று. புதுமுக நடிகர்களைப் பரிச்சயமாக்குவதற்கும், ஒரு படத்திற்கு வரவேற்பு பெற்றுக் கொடுப்பதற்கும்தான் இத்தகைய உதவிகளை விஜய்காந்த் தொடர்ந்து செய்திருக்கிறார். இப்படியான உதவிகளைச் செய்த விஜயகாந்த்தைப் போற்றவே இன்றைய தேதியில் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகளின் உதவியால் மீண்டும் அவரை திரையில் கொண்டு வந்திருக்கிறார் வெங்கட் பிரபு!
We miss you Captain!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


