சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்... கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி, காணாமல் போன இருவர்..

சென்னை, சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிராங்கிளின்(23), ஆண்டோ(20) இருவரும் சகோதரர்கள். இவர்களது நண்பர்கள் கிஷோர் (எ)தமிழரசன்(20), சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன்(20), ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதியைச் சேர்ந்த மனோகர் (19). இவர்கள் ஐந்து பேரும் சென்னையில் புட் டெலிவிரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். வேளாங்கண்ணி சர்ச்சில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வேன் மூலம் இந்த ஐந்து பேருடன் சேர்த்து மொத்தம் 18 பேர் கடந்த 6ம் தேதி சுற்றுலா வந்துள்ளனர்.

ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்

வேளாங்கண்ணிக்குச் சென்று விட்டு தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோயிலுக்கு நேற்று வந்துள்ளனர். இக்கோயிலிலும் திருவிழா நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் நேரம் கோயில் வளாகத்தில் ஓய்வெடுத்துள்ளனர். பின்னர் மீன் வாங்கி குழம்பு வைக்கும் பணியில் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் ஈடுப்பட்டனர். இதில் பிரங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன், மனோகர் ஆகிய ஐந்து பேரும் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று குளித்துள்ளனர்.

அப்போது, ஆழம் இருப்பது தெரியாததால் இருவர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மூன்று பேரும் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் அந்த மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இவர்களுடன் வந்தவர்கள் மீன் குழம்பை தயார் செய்து விட்டு காத்திருந்துள்ளனர். குளிக்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாக வராததால் உடன் வந்தவர்கள் தேடிச்சென்றுள்ளனர்.

உயிரிழந்தவர் உடல்

இதில், கலைவேந்தன், கிஷோர் இருவரும் இறந்த நிலையில் ஆற்றில் உள்ள மண் திட்டில் கிடந்துள்ளனர். இதை பார்த்து உடன் வந்தவர்கள் அதிர்ச்சியில் கதறினர். அழுகுரல்கள் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் திரண்டு விட்டனர். அத்துடன் இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய பிரங்கிளின், ஆண்டோ, மனோகர் ஆகிய மூவரையும் தேடினர். திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் உள்ளூரை சேர்ந்த மீனவர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மூன்று பேரில் மனோகர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். மற்ற இரண்டு பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். சென்னையிலிருந்து வந்த அந்த குழுவினர் இப்படியொரு சம்பவம் நடந்ததை எண்ணி கரையில் நின்று கதறியது சோகத்தை ஏற்ப்படுத்தியது. புட் டெலிவிரி வேலை செய்கின்ற ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். ஆற்றில் குளிக்க சென்றவர்களுக்கு இப்படி நடக்குமுனு நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இதில் தேடப்பட்டு வரும் இருவரும் அண்ணன் தம்பிகள்.

கொள்ளிடம் ஆறு

``கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியதால் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் இருக்கிறது. ஆற்றின் ஒரு பகுதியில் ஆள் மட்ட அளவிற்கு தண்ணீர் செல்கிறது. புதை மணலும் இருக்கிறது. இந்த கொள்ளிடம் ஆற்றில் இருக்கும் ஆபத்து வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தெரிவதில்லை. நடுவில் மணல் திட்டு இருப்பதால் தண்ணீர் கொஞ்சமாக செல்வதாகவும், ஆழம் இல்லை என நினைத்தும் குளிப்பார்கள். அப்போது இது போன்ற அசம்பாவிதம் நடந்து விடுகிறது. ஏற்கனவே இது போல் பல முறை நடந்துள்ளது. பல உயிர்கள் பறிபோயிருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் எச்சரிக்கை செய்வதை அதிக்கபடுத்தி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.