Golden Sparrow : `எனர்ஜியா பாடணும்னு தனுஷ் சாரும், ஜி.வி சாரும் சொன்னாங்க! - பாடகி சுப்லாஷினி
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் தயாராகி வருகிறது.
ஜென் சி களின் காதலை பேசும் படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் கோல்டன் ஸ்பாரோ பாடல் சமீபத்தில் வெளியானது. ஸ்பாட்டிஃபை, யூட்யூப் என டிரெண்டிங் இடத்தை இறுக்கமாக பிடித்திருக்கிறது. ரீல்ஸ்களிலும் இப்பாடலே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த பாடலை பாடியவர் சுயாதீன இசைக்கலைஞர் சுபலாஷினி. அவருக்கு இதுதான் சினிமாவில் பின்னணி பாடகராக முதல் பாடல். பாடலுக்கு வாழ்த்துகளைக் கூறி அவரிடம் பேச தொடங்கினோம்.
"நான் சுயாதீன இசைக்கலைஞராகத்தான் என்னுடைய பயணத்தைத் தொடங்கினேன். 2021-ல என்னுடைய காத்தாடி பாடல் வைரலாச்சு. அதைப் பார்த்துதான் ஜி.வி சார் இந்த பாட்டு நான் பாடுறதுக்கு யோசிச்சாங்கனு நான் நினைக்கிறேன். ஒரு நாள் நான் எப்போதும் மாதிரி சும்மா படம் பார்த்துட்டு இருந்தேன். அப்போதான் அவங்க ஆஃபீஸ்ல இருந்து கால் பண்ணினாங்க. அப்போ தனுஷ் சார், ஜி.வி சார் பண்ற படம்னு சொல்லி எல்லா விவரத்தையும் சொன்னாங்க. நானும் கிளம்பி போனேன். அப்படி கிடைச்ச வாய்ப்புதான் கோல்டன் ஸ்பாரோ. இந்த பாடலோட ரெக்கார்டிங் ரொம்ப சீக்கிரமாகவே முடிஞ்சிருச்சு. ஜி.வி சார் இந்த பாடல் பத்தி முதல்ல முழுமையாக என்கிட்ட சொல்லிட்டாங்க.
அதை புரிஞ்சுகிட்டு நான் பாடினேன். ஆரம்பத்துல கொஞ்சம் இந்த பாடலை சோகமாக பாடிட்டு இருந்தேன். அப்போ ஜி.வி சாரும் தனுஷ் சாரும் எனர்ஜியாக பாடுங்கனு சொன்னாங்க. ரெக்கார்டிங் முடிஞ்சதும் ரெண்டு பேரும் என்னை வாழ்த்தினாங்க. இந்த பாடலுக்கான ப்ராசஸ் பார்க்கும்போது எனக்குமே வியப்பாக இருந்துச்சு. ஒரு பாடலாசிரியராக பார்க்கும்போது எனக்கு அவங்க பாடல் எழுதுறது ரொம்பவே வியப்பை கொடுத்துச்சு. உடனடியாக அடுத்தடுத்து பாடல் வரிகளை கொடுத்துட்டே இருந்தாங்க." என்ற அவர், "மக்கள் இப்போதான் பொறுமையாக என்னுடைய குரலை அடையாளப்படுத்துறாங்க. பாடல் வந்த முதல் இரண்டு நாட்கள்ல ஜி.வி சார் குரல் பத்தியும், தனுஷ் சார் குரல் பத்தியும், அறிவு சார் பாடல் வரிகள் பத்தியும் நிறைய விஷயங்கள் பேசுனாங்க.
அதுக்குப் பிறகுதான் இந்த பாடல்ல வர்ற என்னுடைய குரலையும் அடையாளப்படுத்தி பாராட்டுறாங்க. இப்படியான அனுபவம் எனக்கு ரொம்பவே புதுசா இருந்துச்சு. ஒரு பின்னணி பாடகராக எனக்கு சினிமாவுல முதல் பாடல் இதுதான்." என இந்த கோல்டன் ஸ்பாரோ பாடல் தொடர்பாக முழுவதையும் கூறினார். இதனை தொடர்ந்து சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு இன்றைய தேதியில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்க தொடங்கினார். அவர், "சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு சினிமாவுல இப்படியான வாய்ப்பு கிடைக்கிறது பெரிய வெற்றிதான். ஆனால் சுயாதீன இசைக்கலைஞர்கள் சினிமாவுல வேலை பார்த்திடனும்னு ஒரு குறிக்கோளோட வேலை பார்க்கமாட்டாங்க.
ஒரு நல்ல பாடலை கொடுத்திடனும்னுதான் குறிக்கோளோட இருப்பாங்க. மக்களும் சுயாதீன இசைக்கலைஞர்களோட பாடல்களை கேட்டு வரவேற்பு கொடுத்து அடையாளப்படுத்துறாங்க. அதுனால என்னைப் போன்ற பலருக்கு சினிமாவுல பாடல்கள் பாடுறதுக்கும், எழுதுறதுக்கும் வாய்ப்புகள் கிடைக்குது. ஆனால் என்னைப் போறோருக்கு சினிமா இறுதி இலக்கு கிடையாது. நாங்க காத்தாடி பாடல் பண்ணும்போது சோசியல் மீடியாவுல ரீச் கிடைக்குமானு பண்ணவே இல்ல. அத முதல்ல ஒரு நிமிட பாடலாகதான் தொடங்கினோம். அது பிறகு ஒரு முழு நீள பாடலாகவே வந்துடுச்சு. சரியாக பண்ணினால் கண்டிப்பாக மக்களோட வரவேற்பு கிடைச்சிடும்.
அது இப்போ இல்லைனாலும் என்னைக்கோ ஒரு நாள் கிடைச்சிடும். சோசியல் மீடியாவுல நாம போடுற பாடல் ஹிட்டாகணும். ஜென் சிகளுக்கு இந்த பாடல் கண்டிப்பாக பிடிக்கணும்னு ஒரு அழுதத்தோட உணர்ந்துட்டு பண்றாங்க. நானும் சில நேரங்கள்ல அந்த அழுதத்தை உணர்ந்திருக்கேன். ஆனால் உண்மையாக எந்த விஷயத்தை பண்ணினாலும் நம்ம அடையாளப் படுத்தப்படுவோம். காத்தாடி பாடல் பண்ணினதுக்கு பிறகு நானும் சில பாடல்கள் பண்ணினேன். நெட்ஃபிளிக்ஸ்ல ஒரு பாடலும் பண்ணினேன். இப்படியான விஷயங்கள் பண்றதுக்கு காத்தாடி பாடல் ஒரு பூஸ்ட் கொடுத்தது." என்றவர் தனது இசை பயணத்தின் தொடக்கம் குறித்து விவரிக்க தொடங்கினார்.
அவர், "சின்ன வயசுல இருந்தே எனக்கு பாடல் பாடுறதுக்கு பிடிக்கும். ஆனா நான் அப்போ மியூசிக் கத்துக்கல. அதுக்கான வாய்ப்பும் எனக்கு அப்போ அமையல. ஒரு பாடல் பாடுறதுக்கு குரல் அதிகமான பிட்ச்ல இருக்கணும். அது ரொம்பவே மென்மையாக இருக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். என்னுடைய குரல்ல நான் எந்த தமிழ் பாடல் பாடினாலும் அது வேற மாதிரி இருக்கும். அதுக்குப் பிறகு பல ஆங்கில பாடல்கள் கேட்க தொடங்கினேன். அதுதான் என்னுடைய வாழ்க்கைல திருப்புமுனையாக இருந்துச்சு. நம்ம ஸ்டைல்ல பண்ணுவோம்னு யோசிச்சு காலேஜ் படிக்கும்போது ஒரு கிட்டார்லாம் வாங்கி பாடல்கள் பாட தொடங்கினேன்... அன்னைக்கு நான் நினைச்சுக்கூட பார்க்கல. ஸ்பாட்டிஃபைல என்னுடைய பாடல் வரும்னு..." என்றார் நெகிழ்ச்சியுடன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.