Vijay TVK : த.வெ.க-வை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்; `தடைகளைத் தகர்த்து கொடி உயர்த்துவோம்! - விஜய்

த.வெ.க கட்சித் தலைவர் விஜய் தேர்தல் ஆணையம் அந்தக் கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைத்திருப்பதை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 -ம் தேதியன்று முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கட்சி கொள்கைகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருந்தார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். இதனையடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கிய நிலையில், கடந்த வெள்ளியன்று அந்த கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கினார். இந்நிலையில், மாநாடு அனுமதி தொடர்பாக இரண்டு நாள்களில் பதில் அளிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவித்திருந்தனர்.

TVK Vijay - விஜய் த.வெ.க

இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் த.வெ.க இடம்பெற்றது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை த.வெ.க கட்சித் தலைவர் விஜய் இன்று அறிவிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், " என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

pic.twitter.com/LhmAQzSspI

— TVK Vijay (@tvkvijayhq) September 8, 2024

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து கொடி உயர்த்தி கொள்கை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம் ! வாகை சூடுவோம்! என்று" குறிபிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.