Whiskey Ice-cream: விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை; ஹைதராபாத் பார்லருக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
ஹைதராபாத்தில் விஸ்கி கலந்த ஐஸ்கிரீமை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததற்காக கடையினை சீல் வைத்து ஊழியர்களை கைதுசெய்துள்ளனர், கலால் அதிகாரிகள். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது தெரியவந்திருக்கிறது.
ஜூப்ளி ஹில்ஸில் சாலை எண் 1-ல் உள்ள ‘அரிகோ கஃபே ஐஸ்கிரீம் பார்லரில்’ அதிகாரிகள் நடத்திய சோதனையில், பிரபல பிராண்ட் விஸ்கி கலந்த 11.5 கிலோ ஐஸ்கிரீம் மற்றும் விற்பனைக்கு தயாராக இருந்த சில ஐஸ்கிரீம்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் 750 மில்லி விஸ்கியை (ஒரு முழு பாட்டில்) 11.5 கிலோ ஐஸ்கிரீமில் கலந்து இந்த சாராய விற்பனை உத்தியை கையாண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கலால் அமலாக்கத்துறையின் இணை ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறுகையில், ``பார்லர் உரிமையாளர் காட்டு சந்திரா ரெட்டி தலைமறைவாகியதால், இரண்டு ஊழியர்கள் - தயாகர் ரெட்டி மற்றும் ஷோபன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களாக, அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஐஸ்கிரீமுக்கு ஒரு தனித்துவமான சுவை சேர்க்க, விஸ்கி கலந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்து வந்துள்ளனர். அதனை பிரீமியம் விலையில் விற்றுள்ளனர். வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். ஒவ்வொரு கிலோ ஐஸ்கிரீமிலும் 60 மில்லி விஸ்கியை கலந்து சாராயம் விற்கும் உத்தியை கையாண்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாகர் ரெட்டி மற்றும் ஷோபன் ஆகிய இருவரும் விஸ்கி கலந்த ஐஸ்கிரீமை செய்தல் மற்றும் சாப்பிடுவதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமாகி, facebook போன்ற சமூக ஊடகத் தளங்களில் இருந்து கிடைத்த தகவலின் பேரில், கலால் சிறப்புப் பணிக்குழு, இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். ஐஸ்கிரீம்கள் கவர்ச்சிகரமான பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்தன. பார்லரில் அதை, `விஸ்கி-லேஸ்டு ஐஸ்கிரீம் என்று விளம்பரப்படுத்தவில்லை என்றாலும், அது ஒரு தனித்துவமான சுவை என்று கூறி அதை விஸ்கி சாக்லேட் என்று விற்றிருக்கின்றனர்.
பார்லர் உரிமையாளர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என GHMC மற்றும் உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு மதுபானம் கலந்த பொருட்களை விற்பனை செய்வது கடுமையான விதிமீறல் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.