திருமணத்தை மீறிய உறவு; அண்ணனுக்கு பதில் தம்பி வெட்டிக் கொலை... தூத்துக்குடியில் நடந்தது என்ன?
தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். பொறியியல் பட்டதாரியான இவர், அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தார். பிரவீன்குமார் வீட்டில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். அப்போது வீடு புகுந்த ஒருவர், திடீரென பிரவீன் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பிரவீன்குமாரின் சகோதரரான வினோத் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மனைவி சக்தி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இதனையறிந்த செல்லப்பா, தன் மனைவியை கண்டித்ததுடன் அங்கிருந்து ஏரல் பகுதியிலுள்ள ஒரு கிராமத்திற்கு குடியேறினார். இருப்பினும் வினோத்துக்கும் செல்லப்பாவின் மனைவிக்கும் இடையேயான பழக்கம் நீடித்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு செல்லப்பா வீட்டிற்கு வந்த போது செல்லப்பாவின் மனைவியுடன் வினோத் தனிமையில் இருந்துள்ளார். செல்லப்பாவை கண்டதும் வினோத் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த செல்லப்பா, வினோத்தை கொலை செய்ய திட்டமிட்டு, அவரது வீட்டிற்குச் சென்ற நிலையில்தான், வினோத் என நினைத்து அவரது தம்பி பிரவீன்குமாரை வெட்டி கொலை செய்துள்ளார். தலைமறைவான செல்லப்பாவை போலீஸார் தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பிரவீன்குமார் சமூகவலைதளங்களில் கூட இல்லாமல் முழுநேரமாக அரசுத் தேர்வுக்கு தயாராகி வந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


