Vinayagar Chaturthi : பனை ஓலையில் உருவான விக்ன விநாயகர் சிலை - அசத்தும் தூத்துக்குடி பனைத் தொழிலாளி!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி.  இவர் பனையேறும் தொழில் செய்து வந்தபோது பனையில் இருந்து தவறி விழுந்தார். அதன்பின்னர் இவரால் பனை ஏற முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் பனை ஓலையில் ஆலய கோபுரம், கிறிஸ்தவ ஆலயம், தாஜ்மஹால், பீரங்கி என 350-க்கும் மேற்பட்ட உருவங்களைச் செய்து அசத்தியுள்ளார். மேலும், காமராஜர், பள்ளி மாணவர், மாணவி ஆகியோர் உருவங்களைப் பனை ஓலையில் தத்ரூபமாகச் செய்தார்.

விநாயகர் சிலையுடன் பால்பாண்டி

இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்ததைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது முழு உருவங்களையும் பனை ஓலைகளைக் கொண்டு தத்ரூபமாகச் செய்து அசத்தியுள்ளார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பனை ஓலையைப் பயன்படுத்தி விநாயகர் முழு உருவத்தை உருவாக்கி அசத்தி உள்ளார் பால்பாண்டி. இந்தப் பனை ஓலையால் செய்யப்பட்ட விநாயகர் சிலை காண்பவர்களைக் கவரும் வண்ணம் உள்ளது.

விநாயகர் உருவத்தில் உள்ள கிரீடம், நகைகள், கோடரி, சூலாயுதம், உடைகள் என அனைத்தையும் பனை ஓலையில் செய்துள்ளார்.

பால்பாண்டியிடம் பேசினோம், “ராமானுஜம்புதூர் பக்கத்துல உள்ள சீலாத்திகுளம்தான் நான் பிறந்த கிராமம். எங்களோட பரம்பரைத் தொழிலே பனை ஏறும் தொழில்தான். அஞ்சாம் வகுப்பு வரைதான் படிச்சேன். அப்பாவுடன் பனைத் தொழிலுக்கே போக ஆரம்பிச்சேன். வெட்டிப்போடும் பனை ஓலை, நுங்கு குலைகளைச் சேகரித்தல், பதனீர் காய்ச்சுதல்,  கருப்பட்டி ஊற்றுதல், சிப்பம் கட்டுறதுன்னு சின்னச்சின்ன வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சேன்.

பனை ஓலையில் விநாயகர் சிலை

அப்படியே,  கொஞ்சம் கொஞ்சமாப் பனை ஏறவும் கத்துக்கிட்டு,  13 வயசுல தனியா பனை ஏறி கலசம் கட்டி, பதனீர் இறக்க ஆரம்பிச்சுட்டேன். இதுவரைக்கும் முப்பதாயிரம் பனை வரை ஏறி, இறங்கியிருக்கேன். உச்சியில இருந்து மூணு முறை கீழே விழுந்தும் எந்த அடியுமில்லாம தப்பிச்சுட்டேன். 6 வருசத்துக்கு முன்னால வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குறதுக்காக பைக்குல கடைக்குப் போயிருந்தப்போ எதிரே வந்த கார் மோதி இடுப்பு, கால்பகுதியில பலமா அடிபட்டுச்சு.

இனிமேல் சைக்கிள், பைக் ஓட்டக் கூடாது ரொம்ப தூரம் நடக்க கூடாது. பனைமரம் ஏறவே் கூடாதுன்னு  டாக்டர் சொன்னதுமே உயிரே போனது மாதிரி சோர்ந்துட்டேன். இனிமேல் பனை ஏற வேண்டாம்ப்பா.. நாங்க வேலைக்குப் போறோம்ல. குடும்பதைப் பார்த்துக்குறோம். நீங்க ஓய்வெடுங்க ன்னு பசங்களும் சொல்லிட்டாங்க. ரெண்டு வருசம் சும்மா இருந்து பார்த்தேன்.

ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா... பனைக்குப் பனை ஏறி இறங்கிட்டு இருந்தவனை ஒத்த ரூமுக்குள்ள உட்கார்ந்து ஓய்வெடுங்கன்னு சொன்னா எப்படிய்யா இருக்க முடியும்?  ஒரு வருசம் வரைக்கும் பெட்டி முடைஞ்சேன். 

பால்பாண்டி

பெட்டிக்கு பதிலா ஏதாவது உருவங்களைச் செய்து பார்க்கலாமான்னு எனக்குத் தோணுச்சு. பேரன், பேத்திகளுக்கு விளையாட முதல்ல பொம்மை செய்தேன். அதுக்கே ஒரு நாள் முழுவதும் ஆயிடுச்சு. தொடர்ந்து, வில்லு வண்டி, விமானம்,  ஒட்டகம்,  யானை, குதிரை, திருச்செந்தூர் கோயில் கோபுரம், தேவாலய கோபுரம்,  தாஜ்மஹால், கலப்பை ஏந்திய விவசாயி,  உழவு விவசாயி, ஓலைச் செருப்பு…ன்னு என் மனசுல என்னென்ன தோணுதோ, யார் என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சேன்.

மனித உருவங்களைச் செய்தா என்னன்னு தோணுச்சு.   மறைந்த தலைவர்கள்ல எனக்கு காமராஜர் ரொம்பப் பிடிக்கும். அதனால, காமராஜரையே டெஸ்டுக்கு எடுத்துக்கிட்டேன். முதலில் கால்பகுதியை செஞ்சு முடிச்சேன். தொடர்ந்து இடுப்புப்பகுதி, உடல்பகுதி, கை, மணிக்கட்டு,  தலைப்பகுதி.. என ஒவ்வொரு பாகமாகச் செய்து, கடைசியா எல்லாத்தையும் ஒன்னு சேர்த்தேன். ஜவுளிக்கடையில வேட்டி, சட்டை வாங்கிப் போடலாம்னு நினைச்சேன்.

பனை ஓலையில் விநாயகர் சிலை

அதையும் ஏன் ஓலையில செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அதுக்கு ஏத்ததுபோல ஓலையைப் பக்குவமாக் கிழிச்சு செய்தேன். அவரோட பிறந்தநாளில் வீட்டுலயே காட்சிப்படுத்தினேன். தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்தை தத்ரூபமாக பனை ஓலையில் உருவாக்கி உள்ளேன். 4 மாத காலமாக மிகவும் கஷ்டப்பட்டு இந்த விநாயகரை உருவாக்கி உள்ளேன்” என்றார் பால்பாண்டி.

பால்பாண்டி உருவாக்கிய விநாயகரைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வழிபட்டு வருகிறார்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.