Women Health: பெண்கள் கட்டாயம் சோம்பு சாப்பிடணும்..! ஏன் தெரியுமா?

இயற்கையை ரசிக்க உதவும் கண்களுக்கான மருந்து இது’ எனக் கிரேக்க மருத்துவர் பிளைனி, சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தைப் பெருமைப்படுத்துகிறார். கிரேக்க புராணங்களிலும் சோம்பின் மேன்மைகள் பேசப்பட்டுள்ளன. இதன் பிறப்பிடம் மத்தியத் தரைக்கடல் நாடுகள் என்கிறது வரலாறு. இதன் 10 பலன்கள் பற்றி சொல்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம் குமார்.

1. சோம்பில் தாவர ஈஸ்ட்ரோஜென்கள் அதிகம் இருப்பதால், பெண்களுக்கு உண்டாகும் நோய்களைத் தடுக்க இது வரப்பிரசாதமாகும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் கொடுக்கலாம்.

2. ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு, கழிவுகளை வெளியேற்றி, செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவும். சமையலில் தவறாமல் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நமது உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

3. ரத்தக் குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும் முக்கியக்கூறு சோம்பில் இருக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க உதவும். திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

Eating

4. சோம்பை லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு கிராம் எடுத்து, பனைவெல்லத்துடன் சேர்த்துச் சுவைத்துச் சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. செரிமானத் தொந்தரவுகள் ஏற்படும்போது அலமாரியில் இருக்க வேண்டிய மருந்து சோம்புதானே தவிர, சிந்தடிக் மாத்திரைகள் அல்ல.

5. நீண்ட நாள்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக்கூட, பசி உணர்வைத் தூண்டும் மாயாஜாலப் பொருள் இந்த சோம்பு.

6. அத்திப்பழச் சதைப்பகுதியுடன் சோம்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல் அடங்கும். இந்தக் கலவையில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்த அணுக்கள் அதிகரித்து உடலுக்கு உற்சாகம் கிடக்கும்.

7. சோம்பு சார்ந்த மருந்துகளைப் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் சாப்பிடுவதால், தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்கும் சோம்பின் சாரங்கள் சென்று சேரும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் குடல்பிடிப்பைக் குணமாக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சித்த மருத்துவர் - விக்ரம் குமார்.

8. சாப்பிட்டு முடித்ததும் செயற்கை இனிப்பூட்டி மெழுகப்பட்ட சோம்பு, பல்வேறு உணவகங்களில் நமக்காகக் காத்திருப்பதைப் பார்த்திருப்போம். அதைத் தவிர்த்து வீட்டிலிருக்கும் சோம்பைப் பயன்படுத்துவதே சிறந்தது. சோம்பிலிருக்கும் மருத்துவக் குணமிக்க எண்ணெய்ச் சத்துகள் ஓரளவு உறிஞ்சப்பட்ட பிறகு, மீதமிருக்கும் தரம் குறைந்த சக்கைதான் சில உணவகங்களில் பயன்படுத்தப்படுகிறது என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

9. சமைத்து முடித்த உணவில் சுவை குறைவாக இருப்பதாகத் தோன்றினால், கொஞ்சம் சோம்புத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால், உணவின் சுவை அதிகரித்திருப்பதை உங்கள் நாக்கின் சுவைமொட்டுகள் எடுத்துரைக்கும்.

10. இறைச்சிகளின் மீதும் முட்டை உணவுகளின் மீதும் சோம்புத்தூள் தூவினால் சுவை கூடுவதுடன் செரிமானமும் எளிதாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.