Exclusive: `எங்களை இவங்க பாவப் பிறவின்னு சொல்லிட்டாங்களே; அதை விட..?! - ஆசிரியர் சங்கர் வேதனை
அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பேசியது சமூகவலைதளப் பக்கங்களில் பேசு பொருளாகி உள்ளது. அவர் மாணவர்களிடையே, ` போன பிறவியில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதைப் பொறுத்தே இந்தப் பிறவி உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பேசியிருந்தார். அதோடு, மாற்றுத்திறனாளிகள் குறித்தும் தவறாக பேசியிருந்தார். அவர் பேசியபோது ஆசிரியர் ஒருவர் அவரை நிறுத்தி அவரை எதிர்த்து கேள்வி கேட்டிருந்தார். அந்த ஆசிரியர் பெயர் சங்கர். பார்வைச் சவால் கொண்ட அவர் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்.
அவரிடம் இது குறித்துப் பேசினோம்.
"அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கிறதுக்காகத்தான் அவரை யாரோ இன்வைட் பண்ணியிருக்காங்க. `சிகரம் தொடு அப்படிங்கிறதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு. அவர் யார்னு எனக்குத் தெரியாது. அவர் நம்ம பள்ளிக்கு வந்த பிறகுதான் யூடியூப் சேனலில் பார்த்தப்ப தான் அவருடைய பின்புலம் குறித்து தெரிந்தது. அவர் பேசின விஷயங்கள் எல்லாம் மாணவர்களுக்கு பேச வேண்டிய தலைப்பு கிடையாது. அவர் பேசினது எல்லாமே ஒரு மதக் கொள்கைகளை மையமாகக் கொண்டு பேசினதாகத்தான் இருந்தது.
ஆரம்பத்திலேயே ஆட்சேபிச்சேன். அவர் ஆசிரியர்களுக்கு போதிய ஞான அறிவு இல்ல.. நீங்க சொல்லாததை நான் சொல்லப் போறேன்.. பாடப் புத்தகத்துல இல்லாததை நான் சொல்லப் போறேன் அப்படின்னு என்னென்னமோ பில்டப் கொடுத்துப் பேச ஆரம்பிச்சார்.

ஒருகட்டத்துக்கு மேல பாவம், புண்ணியம், முற்பிறவின்னா என்ன? மறுபிறவின்னா என்ன? அப்படின்னுலாம் சொன்னார். முற்பிறவியில் நீங்க செய்த பாவத்தின் விளைவாகத்தான் நீங்க கை, கால் இல்லாம, கண் இல்லாம, ஒருத்தன் ஏழையா, ஒருத்தன் பணக்காரனா பிறக்கிறான்.. இதுக்கெல்லாம் முற்பிறவியில் அவன் செய்த பாவம் தான் காரணம்னு சொன்னதும் என் மனசு காயப்பட்டது. இதை இங்கப் பேசுவதற்கான அவசியம் என்ன?னு கேட்டேன்.
இது மோடிவேஷனல் ஸ்பீச்சா? அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவா?னு கேட்டேன். `ஏன் அரசுப்பள்ளியில் ஆன்மிகம் பேசக் கூடாதா?னு கேட்டார். பேசக் கூடாதுன்னு சொன்னேன். அரசியலமைப்புச் சட்டத்துல இருக்கான்னு கேட்கவும், ஆமா இருக்கு… `All are equalனு பதில் சொன்னேன். அதைத் தொடர்ந்து, அவர் கேட்ட கேள்விக்கும் அதே பதிலைத்தான் சொன்னேன். என்கிட்ட மைக் இல்ல.. அவர்கிட்ட தான் மைக் இருந்தது. அங்க நான் சொன்ன விஷயங்கள் ஒரு சிலது வரல. அதனால நான் சொன்னது சரியா ரீச் ஆகாம இருந்திருக்கலாம்.
தொடர்ந்து நான் அதைப் பற்றி தான் பேசுவேன். இது தான் வாழ்வியல் அப்படின்னு பேச ஆரம்பிச்சார். பேசக் கூடாதுன்னு சொல்லவும் என்னை எல்லாரும் வெளியில கூட்டிட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் தொடர்ந்து 10 நிமிஷம் பேசிட்டு என்னை அவமானப்படுத்திட்டீங்கன்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டார். டீச்சர்ஸ் எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. ஆனா, அவங்க யாரும் கேள்வி கேட்கல. நான் பகுத்தறிவு சார்ந்த கொள்கைகள் உள்ளவன் என்பதால் ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் பேசுறதை தவிர்த்தேன், இன்னொன்னு பர்சனல் அட்டாக் பண்ணினார். அது ரெண்டும் தான் அன்னைக்கு என் கோபத்தை வெளிக்காட்டினதற்கான காரணம்.
ஏற்கனவே அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசியிருக்கார். அப்ப பெண்கள்கிட்ட உங்களை ஞான நிலைக்கு கொண்டு போகிறேன்னு சொல்லி கண்ணீர் விட்டு அழ வச்சிருக்கார். அதுல இருந்த பெண் குழந்தைகள் சிலர், `நாங்க பழசை எல்லாம் மறந்துட்டோம்.. புதுசா பொறந்திருக்கோம்னுலாம் சொல்லியிருக்காங்க போல! இதை மிகைப்படுத்தி பேசுறார். அதோடு, `உங்க தாய்கிட்ட இருந்து கூட கிடைக்காத ஞானநிலையை நான் உங்களுக்குக் கொடுப்பேன் அந்த மாதிரியெல்லாம் சில விஷயங்கள் பேசுறார். அவங்க அழுறதை அவரோட வெற்றியா நினைக்கிறார்.

ஆனால், நாங்க அப்பவே சொன்னோம். திருக்குறளில் சொல்லாதது, அற இலக்கியத்தில் சொல்லாதது ஒன்றும் இவர் புதியதாக சொல்லப் போவதில்லை. அதை மேற்கோள் காட்டி பேசியிருந்தால் கூட நான் அனுமதிச்சிருப்பேன். ஆனால், அறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கையை விட மூடத்தனமான விஷயத்தை மாணவர்களிடம் விதைக்கிறது எதிர்காலத்துக்கு நல்லதல்ல அப்படிங்கிறதை சுட்டிக் காட்டினேன். இனி, அரசுப் பள்ளிகளில் மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் இது போல பேசக் கூடாது.
எங்க ஸ்கூலில் இதுதான் முதன்முறை. நான் இருக்கிறது சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்தது. அவர் காலையில் அசோக் நகரில் பேசிட்டு மதியம் எங்க பள்ளிக்கு வந்திருக்கார். ரெண்டையும் லிங்க் பண்ணி சோசியல் மீடியாவுல போட்டிருக்காங்க.

அமைச்சருக்கு இது யார் அனுமதிச்சது? எப்படி இது உள்ள வந்தது?னு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைச்சு விசாரணை செய்த பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்காங்க. என்னை நேரில் சந்திச்ச அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, `துணிச்சலா கேள்வி கேட்டிருக்கீங்க. மத்தவங்க தயங்கினாங்க... நீங்க தைரியமா கேட்டிருக்கீங்க!னு சொன்னார்.
கேள்வி கேட்குறது தானே பகுத்தறிவு. அதுதான் நான் பண்ணினேன். இவன்லாம் வாத்தியாரே கிடையாது.. வேற மதத்தைச் சார்ந்தவன்னு மோசமா அவருடைய யூடியூப் சேனலில் அவர் போட்டிருந்த வீடியோவுக்கு என்னைத் திட்டி சிலர் கமென்ட் பண்ணியிருந்தாங்க. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தையும் சவாலுடன் தான் கடந்து வந்திருக்கோம். படிப்புல இருந்து குடும்ப சூழலில் இருந்து வேலைவாய்ப்பு பெறுகிற வரைக்கும் எல்லாமே சவால் தான். உங்களுக்கு சாதாரணமா கிடைக்கிற ஒவ்வொரு விஷயமும் எங்களுக்கு சவால் தான்! அப்படி இருக்கிற பட்சத்தில் இது எங்களை நம்பிக்கை இழக்க வைக்குதுன்னு தான் சொல்லுவேன். முற்போக்காக நாம சிந்திக்கிறோம். இவங்க நம்மள பாவப் பிறவின்னு சொல்லிட்டாங்களே அதை விட என்ன சொல்லிட முடியும்?! என்றார் வேதனையுடன்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


