`பில் பாஸ் பண்ண ரூ.3000 லஞ்சம் வாங்கிய பிடிஓ கைது... லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

சாலை ஒப்பந்தத்தொகையை விடுவிக்க லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், ஒப்பந்ததாரர். இவர், நரிக்குடி யூனியன் அலுவலக ஒப்புதலின்பேரில் சாலை இலுப்பைகுளம் முதல் சொக்காயம்மன் கோவில் வரை ரூ. 5லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி செய்துள்ளார். தொடர்ந்து, இந்த பணிக்கான ஒப்பந்த நிதியை விடுவிக்கக்கோரி ஒப்பந்ததாரர் அஜித்குமார், நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் பில் தொகைகளை சமர்ப்பித்துள்ளார்.

நரிக்குடி யூனியன் அலுவலகம்

இந்தநிலையில், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (ரெகுலர்) பணியாற்றி வரும் ஜெய புஷ்பம் என்பவர், பணிக்கான தொகையை விடுவிக்க ரூ.5ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என அஜித்குமார் கூறவும், இறுதியாக ரூபாய் ரூ.3,000 தந்தால் பில்தொகையை பாஸ் செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பம் கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் தர விருப்பமில்லாத அஜித்குமார், பி.டி.ஓ.ஜெய புஷ்பம் லஞ்சம் கேட்டது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயனம் தடவிய ரூபாய் 3,000 லஞ்சப் பணத்தை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ. ஜெயபுஷ்பமிடம் கொடுக்க அறிவுறுத்தி அனுப்பினர்.

பிடிஓ ஜெயபுஷ்பம்

அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.ஜெயபுஷ்பம், ரூ.3000 லஞ்சப்பணத்தை அஜித்குமாரிடமிருந்து பெற்றபோது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் சால்வன்துரை தலைமையிலான போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர். பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.