பீஞ்சமந்தை: `கல்வி தடைபடக் கூடாது - மலைக்கிராம மாணவர்களை கரையேற்ற முனையும் ஆசிரியர்; உதவும் இளைஞர்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் மலை பகுதியில் அமைந்துள்ளது, பீஞ்சமந்தை என்ற கிராமம். இந்த கிராமத்தில் 1,735 வீடுகள் அமைந்துள்ளன. இந்த கிராமத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் தங்கள் நிலப்பகுதியில் விவசாயம் செய்துதான் வருமானம் ஈட்டுகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் எப்படியாவது படிக்க வேண்டும் என்றும் தினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக உலகநாதன் என்னும் பட்டதாரி இளைஞர், பள்ளி மாணவர்களை தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்.

பீஞ்சமந்தை கிராமத்திற்கு அருகில் எலந்தம்புதூரில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் தற்போது 106 மாணவர்கள் படிக்கின்றனர். இதற்கு முன்பு 2021-22 ஆம் கல்வி ஆண்டில் இந்தப் பள்ளியில் 30 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். சாலை வசதி இல்லாத காரணத்தினாலும், போக்குவரத்து வசதி இல்லாததனாலும் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானது. இதனால் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் என்பவர் எலந்தம்புதூரில் வசிக்கும் உலகநாதன் என்னும் பட்டதாரி இளைஞரிடம் மாதம் ரூ.2,000 பெட்ரோல் செலவுக்காக கொடுத்து இரு சக்கர வாகனத்தில் மாணவர்களை தினமும் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்.

தலைமை ஆசிரியர் ஜோசப்

இது குறித்து எலந்தம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப்பிடம் கேட்டபோது, ``மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமானபோது, எலந்தபுதூர் சுற்றி உள்ள மூன்று கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தினோம். அதில் அதிகமான மாணவர்கள் சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளிக்கு வருவதை நிறுத்தியுள்ளனர் என அறிந்த பிறகு, அந்தப் பகுதியில் படித்த இளைஞரான உலகநாதன் என்பவரிடம் என்னுடைய சொந்த செலவில் மாதம் 2,000 ரூபாய் கொடுத்து, பள்ளிக்கு மாணவர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வரும்படி ஏற்பாடு செய்துள்ளேன். இதனால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 30-லிருந்து 106-ஆக உயர்ந்துள்ளது.” எனக் கூறினார்.

பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் உலகநாதனிடம் பேசியபோது, ``என்னுடைய தந்தை சிறு வயதிலேயே இறந்ததால் எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலைக்குச் சென்றது. நான் சிறு வயதிலேயே என்னுடைய கிராமமான எலந்தம்புதூரில் இருந்து பேரணாம்பட்டு பழங்குடியினர் விடுதியில் தங்கி அங்கு என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தேன். பிறகு கல்வி உதவித்தொகை மூலம் திருச்சியில் எனது இன்ஜினீயரிங் படிப்பை முடித்தேன். படித்து முடித்த பிறகு எனது கிராமத்திற்கு வந்தபோது இங்கு பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாவதை அறிந்தேன்.

உலகநாதன்

எனது கிராமத்தில் உள்ள மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் தலைமை ஆசிரியர் ஜோசப் சாருடன் தன்னார்வலராக இணைந்து பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, பள்ளிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தோம்.

தலைமை ஆசிரியர் ஜோசப் என்னிடம் மாதம் 2,000 ரூபாய் பெட்ரோல் செலவுக்காக கொடுக்கிறார். அதன் மூலம் நான் மாணவர்களை பள்ளிக்கு தினமும் அழைத்துச் செல்கிறேன்.

மழை காலங்களில் எங்களது பயணம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. காரணம் எங்களது கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. தினமும் 4 முறை பயணித்து 15 மாணவர்களை நான் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன்.

நான் தொடர்ந்து பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு தன்னார்வலராக பாடம் எடுக்கிறேன். TNPSC போட்டித் தேர்வுக்கும் படித்து வருகிறேன்” எனக் கூறினார்.

பீஞ்சமந்தை அடுத்த எலந்தம்புதூர் மலை பகுதியில் முறையான சாலை வசதியும், போக்குவரத்து வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.