GOAT: வெங்கட் ப்ரோ, இது ஓவரா இல்லையா? - கோட் க்ளைமாக்ஸூம் மும்பை ரசிகர்களின் கலாய்யும்!
GOAT படத்தின் க்ளைமாக்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தைக் காட்டியிருந்தார்கள். அதில், சென்னை அணி 205 ரன்களை சேஸ் செய்திருக்கும். இதை வைத்துத்தான் VP ப்ரோ உங்களுக்கு இது ஓவரா இல்லையா.. என மும்பை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மும்பைக்கு எதிராக இவ்வளவு பெரிய சேஸிங்கை சென்னை அணி செய்ததே இல்லை. இப்படி எதாவது படத்தில் கற்பனையாகக் காட்சிப்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம் என மும்பை ரசிகர்கள் ஜாலி மோடில் வம்பிழுத்து வருகின்றனர்.
ரசிகர்களின் கலாய் கம்பு சுற்றல்களைத் தொடர்ந்து இரண்டு அணிகளுடைய சில ரெக்கார்டுகளை தூசி தட்டி எடுத்துப் பார்த்தோம்.
2008 இல் ஐ.பி.எல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இரு அணிகளும்தான் முரட்டு ரைவல்களாக சுற்றி வருகின்றன. இத்தனை ஆண்டுக்கால ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டு அணிகளும் பல முறை நேருக்கு நேர் மோதியிருந்தாலும் அந்த மோதல்களில் வெறும் ஆறே ஆறு முறை மட்டும்தான் இரண்டு அணிகளும் 200+ ரன்களை எடுத்திருக்கின்றனர். டிரா தி மேட்ச் பாணியில் வஞ்சகம் இல்லாமல் இரு அணியும் தலா 3 முறை 200+ ஸ்கோர்களை கடந்திருக்கின்றனர்.
இதில் பிரச்சனையில்லை. GOAT க்ளைமாக்ஸை பார்த்துவிட்டு, அதில் வரும் சேஸிங்கை வைத்துத்தான் மும்பை ரசிகர்கள் ரகளைச் செய்து வருகிறார்கள். சேஸ் ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால் மும்பை ரசிகர்களின் பக்கம்தான் நியாயம் இருக்கிறது. சென்னை Vs மும்பை இந்த மோதலில் மிகப்பெரிய சேஸிங்கை செய்திருப்பது மும்பைதான்.

2021 ஐ.பி.எல் சீசனில் 219 ரன்களை சென்னைக்கு எதிராக வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறது மும்பை அணி. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்களை எடுத்திருக்கும். அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். பரபர திரில்லராக அமைந்த இந்த போட்டியில் மும்பை அணி கடைசி பந்து வரை சென்று வென்றிருக்கும்.
லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் மும்பைக்கு 16 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். ஏற்கனவே ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த பொல்லார்ட் அந்த ஓவரையும் விட்டு வைக்கவில்லை. சென்னைக்கு எதிராக மட்டும் கூடுதல் எனர்ஜியோடு களமிறங்கும் பொல்லார்ட் அந்தப் போட்டியில் 34 பந்துகளில் 87 ரன்களை அடித்து மும்பையை வெல்ல வைத்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். ஐ.பி.எல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங் இதுதான்.
மும்பைக்கு எதிராகச் சென்னை அணியிடம் இப்படியொரு மிரட்டலான சேஸிங் ரெக்கார்ட் இல்லவே இல்லை. மும்பைக்கு எதிராகச் சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததே இல்லை. 2015 ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் மும்பை அணி நிர்ணயித்த 184 ரன்கள் என்ற டார்கெட்டை சென்னை அணி வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறது. இதுதான் மும்பைக்கு எதிராகச் சென்னையின் அதிகபட்ச சேஸிங்.

மும்பை என எடுத்துக்கொள்ளாமல் பொதுவாக எடுத்துக்கொண்டால் கூட சென்னை அணியின் அதிகபட்ச சேஸிங் 214 தான். 2023 ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத்துக்கு எதிராக அதை எட்டியிருக்கும்.
ஆக, மும்பை அணிக்கு எதிராகச் சென்னை அணி இவ்வளவு பெரிய டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை என்கிற வாதத்தில் நியாயம் இருக்கவே செய்கின்றது. ஆனாலும், விடுங்க பல்தான்ஸ் அது வெறும் படம்தானே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


