Doctor Vikatan: காலையில் எழுந்ததும் அடுக்குத் தும்மல், அவதியிலிருந்து விடுபட இயற்கையான தீர்வு உண்டா?

Doctor Vikatan: தினமும் காலையில் எழுந்ததும் அடுக்கடுக்காக வரும் தும்மலுக்கு இயற்கை வைத்தியம் ஏதேனும் உண்டா? பகல் நேரத்திலும் அடுக்குத்தும்மல் வருகிறது. இதற்கும் எளிய சிகிச்சை இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

அடுக்கடுக்கான தும்மல் என்பது சைனஸ் பிரச்னையின் அறிகுறியா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.  உங்கள் இருப்பிடம் எப்படிப்பட்டது என்பதையும் பார்க்க வேண்டும்.

குளிர்ச்சியான பகுதியா, வீட்டைச் சுற்றிலும் மூக்குத்திப் பூ என்று சொல்லக்கூடிய பார்த்தீனியம் செடிகள் அதிகம் இருக்கின்றனவா, சாலையிலிருந்தும் வெளிப்புறத்திலிருந்தும் வீட்டுக்குள் தூசு அதிகம் சேர்கிறதா என்றெல்லாம் பாருங்கள். இவை எல்லாமே சைனஸ் பிரச்னையைத் தூண்டுபவை.  சிலர் வீட்டைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பார்கள். கண்ணுக்குத் தெரியாத தூசு காரணமாகவும் இப்படிப்பட்ட பிரச்னை வரலாம். 

வீட்டுக்குள்ளும் அலுவலகத்திலும் எப்போதும் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருப்பவர்களுக்கு சைனஸ் பிரச்னை வரலாம். இவர்கள் ஃபேன் மற்றும் ஏசி காற்று நேரடியாக முகத்தில் படும்படி இருப்பதையும் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஜன்னலில் இருந்து குளிர்காற்று உள்ளே வராமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். இரவில், பாலில் மிளகுத்தூளும், மஞ்சள்தூளும் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.  மிளகைப் பொடித்துவைத்துக் கொள்ளவும். அதை, தினமும் சாப்பிட்ட பிறகு  மூன்று, நான்கு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரலாம். சித்த மருந்துக் கடைகளில் தாளிசாதி சூரணம் என்று கிடைக்கும். மருத்துவர் ஆலோசனையோடு அதையும் எடுத்துக்கொள்ளலாம்.

பார்த்தீனியம் செடி

ஆவி பிடிப்பது இந்தப் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமையும். பிராயாணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்வதும் நல்ல நிவாரணம் தரும். இவற்றையெல்லாம் மீறி, நெற்றிப்பகுதி, கன்னப்பகுதி போன்றவற்றில் வலி இருந்தால், அது சைனஸ் பிரச்னையாகத்தான் இருக்கும் என்பதால் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது  அவசியம். வலியோடு அடுக்குத் தும்மலும் இருந்தால் நிச்சயம் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சைவ, அசைவ சூப், தூதுவளை, கற்பூரவள்ளி போன்றவற்றைத் துவையலாகச் செய்து சாப்பிடலாம். இவற்றை இடித்துச் சாறெடுத்து தேன் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.  கொள்ளு ரசம், உளுந்து கஞ்சி போல இயல்பிலேயே சூடு அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பிரச்னைக்கான காரணம் கண்டறிந்து அதைத் தீர்ப்பதுதான் சரியானது. புறச்சூழல் காரணம் என்றால் அதைச் சரிசெய்ய வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.