Hema Committe: ``புகார் அளித்த நடிகைகளுக்கு நீதி கிடைக்கும் - வழக்கறிஞர் சாந்தகுமாரி..!

அட்ஜஸ்ட்மென்ட் பூனைக்கு துணிந்து கட்டிய மணி

திரையுலகின் அட்ஜஸ்ட்மென்ட் பூனைக்கு கேரளாவின் ஹேமா கமிட்டி துணிந்து மணி கட்டியிருக்கிறது. ஒருபக்கம் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து பேசவும், புகார் அளிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். மறுபக்கம், கேரள திரையுலகின் சீனியர் மோஸ்ட் நடிகர்களான மோகன்லால் மற்ற துறைகளில் நடப்பதைப் போன்றே திரைத்துறையிலும் நடக்கிறது என்றார் மழுப்பலாக.

மம்முட்டியோ, சமூகத்தில் நடைபெறும் அனைத்து நல்லதும், கெட்டதும் திரைத்துறையிலும் பிரதிபலிக்கும். திரைத்துறை, மக்களால் அதிகமாக கவனிக்கப்படும் ஒன்றாக இருப்பதால்தான் இங்கே நடைபெறும் நிகழ்வுகள் பெரிய விவாதத்தை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

தமிழ்த்திரையுலகில், நடிகை ராதிகா பாதிக்கப்பட்ட திரையுலகப்பெண்களின் சார்பாக தன்னுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் அழுத்தம்திருத்தமாக பதிவு செய்திருந்தார். அதையொட்டி நடந்த விசாரணைக்கும் ஒத்துழைப்புக் கொடுத்திருந்தார் அவர்.

ராதிகா சரத்துக்குமார்

இந்த நிலையில், இதுபோன்ற மீ டூ வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காமல் போகலாம். அதனால், ஹேமா கமிட்டியின் அறிக்கையை அடுத்து புகார் அளித்தப் பெண்களின் வழக்குகளில் அவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்கிற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. நடிகை பார்வதி திருவோத்துவும், குற்றவாளிகள் மீது புகார் அளித்தால், எங்களுக்கு நீதி கிடைக்குமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பல பெண்களின் புகார்கள் பல வருடங்களுக்கு முன்பு நடந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதால், சாட்சிகள் கிடைக்குமா, அவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என, பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் சாந்தகுமாரியிடம் கேட்டோம்.

டெல்லி நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு...

நடிகைகள் எதற்கும் தயார் என்கிற மனப்பான்மையுடன்தான் திரைத்துறைக்கு வருகிறார்கள் என்றே இந்த சமூகம் நினைத்துகொண்டிருக்கிறது. அதனாலேயே, பலகாலங்களாக திரைத்துறையில் பாலியல் தொல்லை நடந்துகொண்டிருக்கிறது என்பது தெரிந்தும்கூட, இந்த சமூகம் அந்தப் பெண்களை அனுசரணையாக பார்ப்பதாக நான் உணரவில்லை. ஆனால், தற்போது, படித்த பெண்கள் எடிட்டிங், கேமரா என டெக்னிகல் நாலெட்ஜுடன் இந்தத்துறைக்கு வருவதால் சூழல் மாறியிருக்கிறது என்றே நம்புகிறேன். அதே நேரம், சினிமாவில் நடிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இன்னமும் இருக்கிறது என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

Parvathy Thiruvothu - பார்வதி

தாங்கள் பாதிக்கப்பட்டதை நடிகைகள் தற்போது சொல்வதை வரவேற்கிறேன். சம்பவம் நடந்த காலத்தில், அதை வெளியில் சொல்லக்கூடிய சூழலோ, தைரியமோ, பக்கபலமோ அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். இந்திய மீ டூ பொறுத்தவரை பல வருடங்கள் கழித்து சொல்லப்படுவையாகவே இருக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும் என்றவர், ஒரு வழக்கில் டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்து புகார் அளித்த நடிகைகளுக்கு நீதி கிடைக்கும் என்கிறார் உறுதியாக.

பல வருடங்களுக்கு முன்பு நடந்தாலும் சொல்ல உரிமை உண்டு

முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார் பெண் பத்திரிகையாளர் ஒருவர். அந்த பத்திரிகையாளரைத் தொடர்ந்து சுமார் 20 பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அக்பர், அந்த பத்திரிகையாளர் மீது கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கையும் தொடர்ந்தார். அந்த வழக்கிலும் இத்தனை வருடங்கள் கழித்து அக்பர் மீது புகார் சொல்வதற்கான காரணம் என்ன என்றே பேசப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், பத்து வருடங்கள் கழித்தும் ஒரு பெண் தனக்கு நிகழ்ந்த பாதிப்பை சொல்வதற்கு உரிமையிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் மனஉளைச்சல் காரணமாக பல ஆண்டுகள் பேசாமலும் இருக்கலாம் என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. அதனால், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகார் அளிக்கும் பெண்களை தண்டிக்க முடியாது என்றது.

Hema commission

புகார் அளித்த பெண்களிடம், நீங்கள் சாட்சியைக் கொடுங்கள். அதன்பிறகு நாங்கள் தண்டனை கொடுக்கிறோம் என்று சொல்ல முடியாது. எந்த ஆணும் சாட்சி வைத்துகொண்டு பாலியல் தொல்லை கொடுப்பதில்லை. டைரக்டர் செய்தால், அசிஸ்டென்ட் டைரக்டர் சாட்சி சொல்ல வருவாரா? அப்படி வந்தால், அவருடைய வேலை நிலைக்குமா... பாலியல் வன்முறை நடந்தது என்று ஒரு பெண் சொன்னால், அது நடந்திருக்கும் என்று நம்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதாரம் இருந்தாலும், அந்த வழக்கை நீதித்துறை கையில் எடுக்கும். தவிர, புகாரளித்த பெண்கள் சொல்வதில் உள்ள உண்மையை நீதிமன்றம் விசாரணையின் மூலம் தெரிந்துகொள்ளும். அதனால், தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை புகார் அளித்தப்பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்காதோ என்று அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று தைரியம் கொடுக்கிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.