திருச்சி: நூடுல்ஸ் சாப்பிட்ட பள்ளி மாணவி மரணம்? ; `காலாவதியான பொருள்கள் அழிப்பு’ - மா.சுப்பிரமணியன்
திருச்சி மாநகரம், அரியமங்கலத்தில் உள்ள கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மைல்ஸ். இவர், ரயில்வே ஊழியராக உள்ளார். இவரின் மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மைல்ஸ் (15). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜான் ஸ்டெபி ஜாக்குலினுக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிடுவது பிடிக்குமாம். இதனால் அடிக்கடி நூடுல்ஸ் உணவை விரும்பி சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஜான் ஸ்டேபி ஜாக்குலின் மைல்ஸ் வழக்கம்போல் ஆன்லைனில் வாங்கிய நூடுல்ஸ் பாக்கெட்டில் இரவு நூடுல்ஸ் செய்து அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோருடன் சாப்பிட்டு விட்டு இரவு உறங்க சென்றனர். இந்நிலையில், காலையில் ஜான் ஸ்டபி ஜாக்லின் மைல்ஸ் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. அவரின் அண்ணன், தங்கையின் அறைக்கு சென்று பார்த்த போது ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மைல்ஸ் வாயில் நுரை தள்ளிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அவரின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று அரியமங்கலம் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில், அரியமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜான் ஸ்டெபியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது அவரின் உறவினர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே, பெண் இறந்து போய் உள்ளார் என்று நாங்களே வருத்தத்தில் உள்ளோம். தற்பொழுது எதற்காக நீங்கள் அந்த பெண்ணை உடலை பிரேத பரிசோதனை செய்ய விரும்புகிறீர்கள்?. எங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள் என அவரது உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், போலீஸார் தங்களுக்கு புகார் வந்துள்ளது என்றும் அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும் எனவும் கூறி அங்கிருந்து உடலை எடுத்துச் சென்றனர். நூடுல்ஸ் சாப்பிட்டதால் தான் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்யப்பட்டது. அவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் ஆய்வு செய்யப்பட்டு அங்கு காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


