AMMA: `ஹேமா கமிட்டிக்கு முன்பே...’ மலையாளம் மூவி ஆர்டிஸ்ட் சங்கமும் சர்ச்சைகளும் - இனி?

அம்மா சங்கம்:

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை எவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டதோ, அதே அளவுக்கு பரபரப்பாக அம்மா சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டதும் பேசப்பட்டது. நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து அம்மா சங்கத்தினர் யாரும் எதுவும் பேசாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய, சங்கம் கலைக்கப்பட்டது.

அம்மா சங்கம்: தலைவர் மோகன் லால்

`அம்மா’ சங்கம் என்றால்...

அசோசியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்ட் (Association of Malayalam Movie Artists) என்பதின் சுருக்கமே அம்மா (AMMA). ஒவ்வொரு மாநிலங்களிலும் அதில் வெளியாகும் திரைப்படங்களுக்கான தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்-நடிகைகள் என ஒவ்வொரு பிரிவிற்கும் சங்கம் உண்டு. அந்த மாதிரி மலையாள சினிமாவில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கான சங்கம் தான் இந்த அம்மா.

தொடங்கி 30 ஆண்டுகள்...

கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அம்மா சங்கம் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த சங்கத்தின் வயது கிட்டதட்ட 30.

இந்த சங்கத்தில் தற்போது 498 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில் 253 பேர் ஆண்கள், 245 பேர் பெண்கள்.

செயற்குழு கலைக்கப்படுவதற்கு முன்பு, அம்மா சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லாலும், பொது செயலாளராக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்திக் இருந்தார்.

`அம்மா’ சங்கம் தரும் நலத்திட்டங்கள்

அம்மா சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் வயதான மற்றும் கஷ்டப்படும் நடிகர்-நடிகைகளுக்கு கைநீட்டம் என்னும் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.5,000 அம்மா சங்கம் மூலம் கொடுக்கப்படுகிறது.

உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான மருத்துவம் மற்றும் இறப்பு காப்பீடு வழங்கப்படுகிறது.

இறந்த அம்மா சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு, நிதி தேவைக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

நடிகர் திலகன்

தொடர்ந்து வரும் சர்ச்சைகள்...

இப்போது தான் அம்மா சங்கம் சர்ச்சைக்குள்ளும், பிரச்னைக்குள்ளும் சிக்குகிறது என்றில்லை. அது எப்போது தொடங்கியதோ, அப்போதே சர்ச்சைகளும், பிரச்னைகளும் தொடங்கிவிட்டன.

சங்கம் தொடங்கிய முதலாம் ஆண்டிலேயே, அந்த சங்கத்தின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடக்கிறது என பழம்பெரும் நடிகர் மற்றும் நடிகர் பிருத்விராஜின் தந்தையுமான சுகுமாறன் சட்ட ரீதியாக புகாரளித்துள்ளார்.

அம்மா சங்கத்தை பற்றி வெளிப்படையாக பேசியதால் தனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் திலகன் 2010-ம் ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார்.

அம்மா கமிட்டியில் செயற்குழு உறுப்பினர்களில் குறைந்தளவே பெண்கள் உள்ளனர் என்ற புகார் எப்போதுமே இருந்துக்கொண்டே இருக்கிறது. தற்போது கலைக்கப்பட்ட குழுவில் கூட 17 செயற்குழு உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள்.

2017-ம் ஆண்டு மலையாள திரைப்பட நடிகை ஒருவருக்கு நடிகர் திலீப் தூண்டுதலில் நடந்த பாலியல் தொல்லை கொடூரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது தான் தற்போது வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிள்ளையார் சுழி.

- இதை தவிர பல பல சர்ச்சைகள் அம்மா சங்கத்தை சுற்றி வலம் வந்துக்கொண்டு இருந்தன...இருக்கவும் செய்கிறது.

அம்மா சங்கம்: செயற்குழு கலைப்பு

செயற்குழு கலைப்பு

ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் கேரள நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் அளித்து வந்தனர். அப்போது இந்த அறிக்கைக்கோ, நடிகைகளின் புகார்களுக்கோ அம்மா சங்கத்தினர் எந்தவொரு பதிலோ, விளக்கமோ தரவே இல்லை. இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மா சங்கத்தின் அப்போதைய தலைவர் மற்றும் நடிகருமான மோகன்லால் உள்பட 17 செயற்குழு நிர்வாகிகள் தங்களது பதவிகளை கூண்டோடு கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி ராஜினாமா செய்தனர்.

பொது செயலாளர் மீதே குற்றசாட்டு

சங்கம் முழுமையாக கலைக்கப்படுவதற்கு முன்பே பொது செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் எழுந்ததால், அவர் தனது பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தான் சங்கம் கலைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் என்ன கூறினார்?

மோகன்லால் என்ன கூறினார்?

சங்கம் கலைத்தப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த கேரள கிரிக்கெட் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் லால், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்கேயே தான் இருக்கிறேன். தற்போது நடந்து வரும் பிரச்னைக்கு அம்மா சங்கம் மட்டுமே காரணம் கிடையாது. அதனால் எங்களை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை.

மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கம் மட்டுமே எப்படி பொறுப்பேற்க முடியும்? மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ஹேமா கமிட்டி அறிக்கையை நான் வரவேற்கிறேன். விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். மலையாளத் திரையுலகில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாது. பாலியல் புகார் தொடர்பாக அரசு தன் கடமையைச் செய்யும் என்று நம்புகிறேன்" என்று பேசினார்.

அடுத்து என்ன?

2 மாதங்களுக்கு பிறக்கு, அம்மா சங்கத்தின் பொதுக்குழு கூடி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுவரை தற்போதைய உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டியாக தொடர்வார்கள்.

இந்த கால இடைவெளியில் எப்போதும் வழங்கப்படும் அம்மா சங்கத்தின் நிதி பகிர்வுகளும், தேவையான அலுவலக பணிகளும் தொடரும். அதையும் இந்த பாதுகாப்பு குழுவே மேற்கொள்ளும்.

Loading…

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.