அதிமுக நிர்வாகியின் மகன் அடித்துக் கொலை; இருவரைக் கைதுசெய்த போலீஸ் - மன்னார்குடியில் பரபரப்பு!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தென்வடல் காகிதப்பட்டியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் 12-வது வார்டு அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார். இவரின் மனைவி சத்யா முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர். இவர்களது மகன் ஜெயநாராயணன் (38). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். சனிக்கிழமை இரவு பத்து மணியளவில் மன்னார்குடி பந்தலடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஜெயநாராயணன் நண்பர்களுடன் சேர்ந்து சாலையோரத்தில் மது அருந்தியுள்ளார். அதே போல் நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பீர் முகமது (30), நம்பிராஜன் (30) ஆகியோரும் மது அருந்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அப்போது பீர்முகமது, ஜெயநாராயணன் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் உள்ள இட்லி கடையில் இரு தரப்பும் இட்லி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. அப்போதும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜெயநாராயணன் இரவு 12 மணியளவில் பவுண்ட் சந்து வழியாக தன் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பீர்முகமதுவும், நம்பிராஜனும் மரக்கட்டையால் ஜெயநாராயணன் தலையின் பின் பக்கம் பலமாக அடித்துள்ளனர். இதில் அந்த இடத்திலேயே அவர் சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவர் முகத்தில் போட்டுவிட்டு, அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் ஜெயநாராயணன் முகத்தின் ஒரு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயநாராயணன், `காப்பாத்துங்க, காப்பாத்துங்க... எனக் கத்தியுள்ளார். இதை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள், மன்னார்குடி நகர போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தாக்குதலுக்கு பிறகு சாலையோரத்தில் கிடக்கும் ஜெயநாராயணன்

ஜெயநாராயணன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இதை கொலை வழக்காக பதிவுசெய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் பீர்முகமது, நம்பிராஜன் ஆகிய இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.