Hema Committee: அந்த நடிகரால சென்னையை விட்டே ஓடினேன்... - ஓர் இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!
திரையுலகைச் சேர்ந்த பெண்களில் சிலர் மட்டுமே துணிந்து எப்போதாவது ஒருமுறை காஸ்ட்டிங் கவுச் பற்றி பேசிக்கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட பலர் மெளனம் மட்டுமே காத்து வந்தார்கள். இந்த நிலையை கேரளாவின் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் உடைத்து சுக்கு நூறாக்கியிருக்கிறது. கேரள திரையுலகைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த அத்துமீறலை தங்கள் சோஷியல் மீடியாக்களிலும், மீடியாக்களிலும் பகிர்ந்துகொள்ள, சிலர் தங்களிடம் அத்துமீறிய நடிகர்களைப்பற்றி காவல்துறையில் புகாரும் அளித்திருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, நடிகை சமந்தா, தெலுங்கு சினிமாவிலும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் எனத் தெலுங்கானா மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் திரையுலகிலும், 40 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பங்களித்து வரும் நடிகை ராதிகா, நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்கள் பார்ப்பார்கள். அதன் காரணமாகவே நான் ஹோட்டலில் அறையெடுத்து ஆடை மாற்ற ஆரம்பித்தேன் என்பதில் ஆரம்பித்து, `நடிகைகளின் அறைக்கதவைத் தட்டுவது 1960-லிருந்தே இருக்கிறது, தட்டியவர்களின் பெயர்களைச் சொன்னால் நீங்கள் பயந்து விடுவீர்கள்’ என்பதுவரைக்கும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
நடிகை விசித்ரா விகடனுக்கு அளித்த பேட்டியில், காஸ்ட்டிங் கவுச் பிரச்னை நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெண் அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு, டச் அப் பெண்களுக்கு, டப்பிங் பேசுபவர்களுக்கு, நடனமாடும் பெண்களுக்கு, துணை நடிகைகளுக்கு என பலருக்கும் இருந்து வருகிறது என ஆதங்கப்பட்டிருந்தார். இத்தனை சீனியர் நடிகைகளின் பேட்டிகள் கொடுத்த தைரியத்தாலோ என்னவோ, டப்பிங் துறையில் பணியாற்றிய ஓர் இளம்பெண் அவருக்கு நிகழ்ந்ததை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக, தன் பெயரை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். இனி அவரின் வார்த்தைகளில்...
எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். நான் ரொம்ப நல்லா பாடுவேன். ஊர்ல, அம்மா ஒரு கடையில வேலைபார்த்துட்டு இருந்தாங்க. நான் சென்னையில ஹாஸ்டல்ல தங்கி காலேஜ் படிச்சிட்டிருந்தேன். அவங்களோட சம்பாத்தியம் எங்க ரெண்டு பேருக்கும் போதாது. அதனால, சாயங்கால வேளையில் சில மியூசிக் ட்ரூப்ல அப்பப்போ பாட்டுப் பாடி சம்பாதிச்சிக்கிட்டிருந்தேன். நான் ஆடிக்கிட்டே தான் பாடுவேன். அது ரொம்ப நல்லாயிருக்குன்னு எல்லாரும் பாராட்டுவாங்க. ஒருநாள், ஒரு மியூசிக் ட்ரூப்ல நான் வழக்கம்போல ஆடிட்டே பாடினேன். புரோகிராம் முடிஞ்சதும், அந்த விழாவை ஏற்பாடு செஞ்சவர், நீ ஆடிட்டே பாடுறது ரொம்ப நல்லா இருக்கும்மா. இனி நான் ஏற்பாடு செய்யுற விழாக்கள்ல உன்னையும் பாட வைக்கிறேன். உன் போன் நம்பர் கொடுன்னார். நம்ம குடும்பத்துக்கு விடிவுகாலம் வந்திடுச்சின்னு நம்பி நானும் என் மொபைல் நம்பரை கொடுத்தேன். நம்பர் கொடுத்ததும், நாம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்னு சொன்னார். அப்பாவியா நானும் போஸ் கொடுத்தேன். இந்த போட்டோவால நான் படாதபாடு படப்போறேன்னு எனக்கு அன்னிக்குத் தெரியாம போச்சுக்கா என்று விசும்பியவர், பேச்சைத் தொடர்ந்தார்.
அந்த நபர் என்னோட போட்டோவை ஒரு நடிகருக்கு காட்டியிருக்கார். அவர் நகைச்சுவை, குணச்சித்திர கேரக்டர்ஸ் பண்ற புகழ்பெற்ற நடிகர். அவருக்கு என்னை மாதிரி சின்னப்பொண்ணுங்களை செட்டப் செஞ்சு கொடுத்தா, கொடுக்கிற நபருக்கு சில நிகழ்ச்சிகள் நடத்துறதுக்கு வாய்ப்புக் கொடுப்பாராம். அவருக்கு வாய்ப்புக் கிடைக்க இந்தாளு என் வாழ்க்கையை பலியாக்கணும்னு முடிவு பண்ணியிருக்கார். என் போட்டோவை பார்த்த அந்த நடிகரும் பிடிச்சிருக்கு சொல்லியிருக்கார். என்கூட செல்ஃபி எடுத்துக்கிட்ட அந்த நபர் எனக்கு போன் செஞ்சு, அந்த நடிகருக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு. நீ ஓகேன்னா ஒரு வீடு, ஒரு கார், 25 லட்சம் பணம் கொடுத்திடுவாரு. அவர் அந்த வீட்டுக்கு வர்றப்போ எல்லாம் அவரை நீ சந்தோஷப்படுத்தணும்னு சொன்னார். நான் மாட்டேன்னு சொன்னதும், உன் வீட்டு நிலைமையெல்லாம் விசாரிச்சுட்டுதான் இந்த வாய்ப்பை உனக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்னு அசிங்கமா பேசினார். பிச்சையெடுத்தாவது வாழ்வேன். இந்த அசிங்கத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு நானும் கோபமா பேசினேன்கா. ஆனா, அதுக்கப்புறம் அவனுங்க எனக்கு உயிர் பயம் காட்டிட்டானுங்க.

சென்னையில நான் தங்கியிருந்த ஹாஸ்டல் வாசல்ல எந்நேரமும் அந்த நடிகரோட ஒரு கார் நின்னுக்கிட்டே இருக்கும். ஆரம்பத்துல சில நாள், அந்த காரும் அதுக்குள்ள இருக்கிற ஆளும் என்னை கண்காணிக்கிறதுக்குதான்னு எனக்கு புரியவே இல்லை. இனிமே காலேஜ் போறதுல இருந்து கச்சேரிக்குப்போறது வரைக்கும் அந்த நடிகரோட கார்லதான் போகணும்னு என்கூட செல்ஃபி எடுத்துக்கிட்ட அந்த ஆள் போன் செஞ்சு சொன்னதுக்கப்புறம்தான் நான் ஹாஸ்டல் அரெஸ்ட்ல இருக்கேன்னு எனக்கே தெரிஞ்சுது. ஹாஸ்டலை விட்டு வெளியே வர்றதுக்கே பயமா இருந்துச்சு.
ஒருமுறை, பக்கத்து தெருவுல இருக்கிற கோயிலுக்கு நடந்துப்போறேன்னு சொல்லிட்டு தப்பிக்கப் பார்த்தேன். முடியல. அதுக்கும் அந்த நடிகரோட கார்லதான் போகணும்னு அந்த டிரைவர் சொன்னான். முடியாது போடான்னு சொல்லிட்டு ஹாஸ்டலுக்குள்ள போயிட்டேன். அடுத்த அஞ்சாவது நிமிஷம் அந்த காமெடி நடிகர்கிட்ட இருந்து எனக்கு போன். நான் கிழவன்னு நினைக்கிறியா. ஒருநாள் வந்து பாரு. உன்னை எப்படி சந்தோஷப்படுத்துவேன்னு நீயே தெரிஞ்சுப்பேனு சொல்ல முடியாத அளவுக்கு அசிங்க அசிங்கமா பேசினார்.
அதுநாள் வரைக்கும் யார்கிட்டேயும் இதபத்தி பேசாம இருந்த நான், துணிஞ்சு என்கூட ஹாஸ்டல்ல இருக்கிற அக்காங்ககிட்டயும், என் அம்மாகிட்டயும் விஷயத்தை சொல்லிட்டேன். அந்த அக்காங்க உதவியோட ஒருநாள் விடியற்காலையில ஹாஸ்டல்ல இருந்து தப்பிச்சு என் சொந்த ஊருக்குப் போயிட்டேன். அடுத்த பத்தாவது நாள், எங்கம்மா காட்டின ஓர் ஆளுக்கு கழுத்தையும் நீட்டிட்டேன். படிப்புப் போச்சு... கரியர் போச்சு... சென்னையில இருந்தப்போ சில சீரியல்களுக்கு டப்பிங் கொடுத்திட்டிருந்தேன். அந்த வாய்ப்பும் போச்சு... ஆனா, என்னைக் கஷ்டப்படுத்தினவங்க இப்பவும் ஓஹோன்னுதான் இருக்காங்கக்கா என்கிறார் கண்ணீருடன்.
எத்தனை பெண்களின் கரியர் கனவை சிதைத்திருக்கிறதோ இந்த காஸ்ட்டிங் கவுச். சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அது வெளிச்சம்..!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


