Kolkata Doctor Murder: `அவர்களின் வங்காள எதிர்ப்பு அஜெண்டா; விவாதங்களில் பங்குபெறாதீர்கள்.. - மம்தா
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், நாடு முழுவதிலும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும், பெண்கள் பாதுகாப்பில் உறுதியான நடவடிக்கை கோருகின்றனர்.
முதல்வர் மம்தா, இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியிருக்கிறார். அதேசமயம், ஆட்சியிலிருக்கும் மம்தா அரசின் மீதும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறிருக்க, இந்த விவகாரம் தொடர்பாகக் குறிப்பிட்ட மூன்று ஊடகங்களுக்கு கட்சி சார்பாக செய்தித் தொடர்பாளர்களை அனுப்பப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
இது குறித்த அறிக்கையில், ``ABP ஆனந்தா, ரிபப்ளிக், TV9 போன்ற ஊடகங்களுக்கு, அவர்களின் தூண்டப்பட்ட வங்காள எதிர்ப்பு அஜெண்டா காரணமாக அங்கு செய்தித் தொடர்பாளர்களை அனுப்ப வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊடகங்களின் விளம்பரதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் விசாரணைகள் மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளால், டெல்லி ஜமீன்தார்களால் (மத்திய அரசு) வற்புறுத்தப்படுவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

ஊடக விவாதங்கள் அல்லது உரையாடல்களில் கட்சி ஆதரவாளர்களாகச் சித்திரிக்கப்படும் தனிநபர்களால் தவறான வழியில் செல்லவேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், அவர்கள் யாரும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை. அதோடு கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை" என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைமை குறிப்பிட்டிருக்கிறது.
Statement in connection with the recent media developments pic.twitter.com/e5qvjd4oBm
— All India Trinamool Congress (@AITCofficial) September 1, 2024
முன்னதாக, ABP ஆனந்தா ஊடக விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கோலி கோஷ் தஸ்திதாருக்கும், பா.ஜ.க எம்.ல்.ஏ அக்னிமித்ரா பாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய முடிவு வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த விவாதத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, `மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் தேர்ச்சி மதிப்பெண்களுக்காக மருத்துவ மாணவர்களை மடியில் உட்கார வைத்தனர் என்று கூறியதால் மட்டும் எதிர்ப்பைச் சந்தித்தார். பின்னர், அவர் மன்னிப்பும் கேட்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


