Viral: முதலையை வாயைக் கட்டி டூவீலரில் எடுத்துச் சென்ற இளைஞர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குஜராத்தில் சமீபத்தில் வதோதரா, அகமதாபாத், துவாரகா, செளராஷ்டிரா போன்ற பகுதிகளில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக வதோதரா நகருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் தண்ணீர் 10 அடி வரை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டு மாடியில் சென்று அமரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆற்று நீரோடு, அதில் இருந்த முதலைகளும் நகருக்குள் புகுந்தன. அவ்வாறு புகுந்த ஒரு முதலை வீட்டின் மாடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு முதலை தண்ணீரில் நாயை வாயில் கடித்த நிலையில் பிடிபட்டது. மற்றொன்று கல்லூரி வளாகத்தில் பிடிபட்டது. இதனால் முதலைகள் எங்கு இருக்கின்றன என்று தெரியாமல், மக்கள் ஊருக்குள் புகுந்த ஆற்று தண்ணீருக்குள் கால் வைக்க அச்சம் அடைந்தனர்.

அஜ்வா அணை திறந்துவிடப்பட்டதால் அதில் உள்ள முதலைகள் ஆற்றிற்கு வந்தன. ஆறு நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. அவ்வாறு புகுந்த 24 முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைந்த பிறகு மீண்டும் அவை ஆற்றில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர பாம்பு, ஆமை போன்ற மேலும் 75 விலங்குகள் விஷஜ ஜந்துக்கள் ஆற்றில் இருந்து ஊருக்குள் புகுந்தன. அவை மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வதோதராவில் முதலையை இருவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

Two young men took a crocodile found in Vishwamitra river in Vadodara to the forest department office on a scooter
pic.twitter.com/IHp80V9ivP

— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2024

இரு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் முதலையின் வாயை கட்டி எடுத்துச் செல்வது போன்று அக்காட்சி இருக்கிறது. ஒருவர் வண்டியை ஓட்டுகிறார். பின்னால் இருப்பவர் முதலையை தனது மடியில் வைத்துக்கொண்டு செல்கிறார். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதனை பயத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்தனர்.

இது குறித்து விசாரித்ததில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக இந்திய மருத்துவ அசோசியேசன் தன்னார்வலர்கள் இரண்டு பேர் முதலையின் வாய், வாலை கட்டி வதோதராவில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாக தெரியவந்தது. சோசியல் மீடியாவில் வெளியான இந்த வீடியோவை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதனை பார்த்துவிட்டு மூன்று பேரும் ஹெல்மெட் அணியாமல் செல்வதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.