மூணாறில் காட்டு யானைகள் மோதல்... முறிவால் கொம்பன் பலியானது எப்படி..?
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளில் படையப்பா, அரிசிக்கொம்பன், சக்கைக்கொம்பன், முறிவாலன் கொம்பன் என மூன்று ஆண் காட்டு யானைகள் வலம் வந்தன. சக்கை என்றால் பலாப்பழம், முறிவால் என்றால் முறிந்த வால் என அர்த்தம்.
அதில் அரிசிக்கொம்பன் யானையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். படையப்பா யானை மூணாறு பகுதியில் நடமாடி வருகிறது. குறிப்பாக படையப்பா யானை சாலையோர கடைகளை சேதப்படுத்தி வருகிறது எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதில் சக்கை கொம்பன் மற்றும் முறிவாலன் கொம்பன் யானைகள் சந்தித்துக் கொண்டால் ஒன்றை ஒன்று பலமாக தாக்கிக் கொள்ளவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் சின்னக்கனால் அருகே சிக்குகண்டம் பகுதியில் , கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முறிவால்கொம்பன், சக்கைகொம்பன் ஆகிய இரு காட்டு யானைகளுக்குள் சண்டை நடந்தையை வனத்துறையினர் கண்டுள்ளனர்.
இதில் முறிவால் கொம்பன் யானைக்கு 15 இடங்களில் காயம் ஏற்படுள்ளது தெரியவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சின்னக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் காயங்களுடன் உலவிய இருந்த முறிவால்கொம்பன் யானைக்கு, மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மூணாறு வனத்துறை அதிகாரி ஜோப் ஜே நேரியம்பரம்பில், தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி ஆகியோர் யானையை பார்வையிட்டனர்.

இந்நிலையில் மருத்துவ குழுவினரின் சிசிச்சை பலனின்றி முறிவால் கொம்பன் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து உயிரிழந்த முறிவால் கொம்பன் காட்டு யானைக்கு வனத்திலேயே உடற்கூராய்வு நடத்தப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். ``ஆண் காட்டு யானைகள் ஒன்றை ஒன்று மோதி பலமாக தாக்கிக் கொண்டது. இதில் காயமைடந்த முறிவாலன் யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தோம். கால்நடை மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை அளித்து வந்தனர். இரண்டு நாள்களாக நன்றாக நடமாடி வந்த முறிவாலன் திடீரென உயிரிழந்தது" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


