ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது!

கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவரது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பதாக, மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய, வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானது என மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட, கடந்த ஜூன் 18 - ம் தேதி அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர், ஈரோடு சித்தார்த்தன், காஞ்சிபுரம் ரகு, கரூர் வழக்கறிஞர் மாரப்பன் மற்றும் செல்வராஜ், பிரவின் உள்ளிட்ட 13 பேரும், தலைமறைவாக இருந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் 13 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதனிடையே, கேரளாவில் பதுங்கி இருந்ததாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தொழிலதிபர் பிரகாஷின் உறவினர் பிரவீன் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்தபோது அவர்கள் கோரிய ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது.

பிரகாஷ்

பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதித்துறை எண் :1 - ல் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில், கடந்த ஜூலை 30-ம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தினந்தோறும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கினார். இதன் அடிப்படையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தினம்தோறும் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுபடி கையொப்பமிட்டு வருகிறார். இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் இன்று திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வைத்து சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்படி கைது செய்யப்பட்ட அவர், இன்று மாலை கரூர் காந்திகிராமம், திண்ணப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு, பின்னர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.