``பாஜக முன்பு திமுக மண்டியிட்டு இருப்பதாகத்தான் பார்க்கிறேன்..! - டி.டி.வி.தினகரன்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், "ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வருங்காலத்திற்கு நல்லது. தி.மு.க-வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். அதற்கு தடையாக இருப்பது யார் என்பது அனைவருக்கும் தெரியும். சுயநலத்தால், பதவி வெறியால், பணத் திமிறால், தான் தான் எல்லாம் என்கின்ற அகம்பாவத்தோடு பழனிசாமி செயல்படுவது தான் காரணம்.
பழனிசாமி என்ற சுயநல மனிதர் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. அங்கு உள்ள தொண்டர்களும் இரட்டை இலை எங்கிருக்கிறது ஜெயலலிதாவின் கட்சி பெயர் எங்கே இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு பலவீனமாகி உள்ளார்கள். வரும் 2026 - ம் வருட தேர்தலிலும் பழனிசாமி படுதோல்வி அடைவது உறுதி. இரட்டை இலை சின்னத்தைக் காட்டி பண பலத்தால் மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் 2026 -ம் வருட தேர்தல் வரை அங்கு உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் வாய் மூடி மௌனமாக இருந்தால் 2026 - ம் வருட தேர்தலுக்குப் பிறகு பழனிசாமி அ.தி.மு.க கட்சிக்கு மூடு விழா நடத்தப் போவது உறுதி. அதனால் அங்கு உள்ள நிர்வாகிகள் விழித்துக் கொண்டு சரியான தீர்வு காணாத வகையில், அவர்கள் முயற்சி செய்யாத வரையில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்று இணைவதற்கு வாய்ப்பில்லை.
அதேபோல், ஜெயலலிதா கட்சியில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் செயல்பட்டால் வரக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தி.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் வீழ்த்தக்கூடிய நிலை உருவாகும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கக்கூடிய உரிமை உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் ஜனநாயகத்தின் மன்னர்களாகிய மக்கள் கையில் தான் உள்ளது.
ஏற்கனவே, ஈர்த்த முதலீடுகளால் என்ன பலன் கிடைத்துள்ளது... எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது... எவ்வளவு தொழிற்சாலைகள் வந்து உள்ளது என்பது தெரியாமல் இருக்கும் பொழுது தற்பொழுது முதலமைச்சர் மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணம் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகத்தான் உள்ளது. இருப்பினும் போய் உள்ளார். வந்த பிறகு எவ்வளவு முதலீடு வருகிறது என்பதை பார்த்துக் கொண்டு கருத்து கூறலாம்.

ஆந்திராவில் புதிய தலைநகரங்கள் உருவாக்குதல் உள்ளிட்டவற்றிற்காக கூட்டணி கட்சி என்பதையும் தாண்டி அங்கு கூடுதல் நிதியை ஒன்றிய பா.ஜ.க ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கும் வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி தான் வருகிறது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு என்று சிறப்பு திட்டங்களுக்கான நிதி இல்லை என்பது ஏமாற்றம் அளித்தாலும், எல்லா மாநிலத்திற்கும் பொதுவான நிதிநிலை அறிக்கையை தான் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.
தி.மு.க-விற்கு மடியில் கனம் இருப்பதால் அவர்களுக்கு நிறைய பிரச்னை இருப்பதால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பண பலத்தால் வெற்றி அடைந்ததைப் போல வருகின்ற தேர்தலில் வெற்றி அடைய முடியாது என்பது தெரியும். அதனால், பா.ஜ.க முன்பு தி.மு.க மண்டியிட்டு இருப்பதாகத்தான் பார்க்கிறேன். நாணய வெளியீட்டு இருக்கு இவர்கள் அழைத்ததால் தான் அவர்கள் வந்து பங்கேற்றனர். அதைவிடுத்து, தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் உறவு இருப்பதாக நான் பார்க்கவில்லை. போதை கலாசாரத்தால் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இதை அரசாங்கம் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால், வரும் 2026- ம் வருட தேர்தலில் உரிய தண்டனை வழங்குவார்கள்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


