`6 தலைமுறைகள் கண்ட 107 வயது பாட்டிக்கு விழா எள்ளுப் பேரன் வரை ஒன்று திரண்ட உறவினர்கள்..!

நவீனமயமாகிவிட்ட உலகத்தில் உறவினர்கள் ஒன்றுகூடல் என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. இந்தச் சூழலில் திருப்பூரில் 107 வயதான தங்களது பாட்டிக்கு 700-க்கும் மேற்பட்ட உறவினர்கள் இணைந்து விழா எடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உறவினர்களுடன் 107 வயதான பேச்சியம்மாள்

107 வயதானாலும் தனது துணிகளை துவைப்பது தொடங்கி அன்றாட வேலைகளை யாருடைய தயவும் இன்றி செய்துவருவதாக கூறுகிறார் பேச்சியம்மாளின் கொள்ளுப்பேத்தியான கலைவாணி. அவர் நம்மிடம் பேசுகையில், "ஆயிரம் மூன்றாம் பிறைகளைப் பார்த்தவர்கள் சதாப்த பூர்த்தி அடைந்தவர்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில், 1,300 மூன்றாம் பிறைகளுக்குமேல் பாட்டி பேச்சியம்மாள் கண்டுள்ளார். 100 வயதை அவர் தொட்டபோதே விழா எடுக்க வேண்டும் என திட்டமிட்டோம். சில காரணங்களால் அது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்த ஆண்டு பாட்டிக்கு விழா எடுத்தாக வேண்டுமென பேரன் மற்றும் பேத்திகள் திட்டமிட்டோம். இதற்காக `பேச்சியம்மாள் 107 என்ற பெயரில் வாட்ஸ் ஆஃப் குழுவை கடந்த வாரம்தான் உருவாக்கினோம். எங்களுக்குத் தெரிந்த உறவினர்களின் எண்களை அந்தக் குழுவில் இணைத்தோம்.

உறவினர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு இருக்குமா? என்ற என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததைவிட ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த உறவினர்களை இந்தக் குழுவில் இணைத்தனர். அதன்படி, எங்கள் உறவினர்கள் மட்டும் சுமார் 700 பேருக்கு மேல் குழுவில் இணைந்தனர். சிறிய அரங்கில் விழாவை நடத்த திட்டமிட்டோம். ஆனால், உறவினர்கள் தரப்பில் இருந்து வந்த வரவேற்பை பார்த்ததில், இதற்கென தனியாக மண்டபமே பிடித்துவிட்டோம். பாட்டியிடம் விழா தொடர்பாக கூறியதும் அவரும் உற்சாகமாகிவிட்டார்.

பேச்சியம்மாள்

107 வயதைக் கடந்தாலும், தற்போது வரை துணிகளை அவரே துவைத்துக் கொள்வார். யாருடைய தயவும் இன்றி அன்றாட வேலைகளை கவனித்து வருகிறார். தற்போதைய வாழ்வியலில் 30 வயதைக் கடந்தாலே சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், பேச்சியம்மாள் பாட்டிக்கு 107 வயதைக் கடந்தும் சர்க்கரை, ரத்த அழுத்த பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார். 82 வயதில் அவரை நாகப் பாம்பு கடித்துவிட்டது. அதற்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இதற்கு முழுக்க முழுக்க அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும்தான். 90 வயது வரை நெசவு செய்துவந்தார். நாங்களெல்லாம் வற்புறுத்தியதால்தான் நெசவு செய்வதை நிறுத்தினார். இது பாட்டிக்கான விழாவாக மட்டும் இல்லை. மனக்கசப்பில் பிரிந்திருந்த உறவினர்கள் அதையெல்லாம் மறந்து அன்பை பரிமாறும் நிகழ்வாகவும் இதுமாறிப்போனது. 107 வயதிலும் பிரிந்திருந்த உறவுகளை பாட்டி பேச்சியம்மாள் இணைத்துவிட்டார்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

பேச்சியம்மாள் பேசுகையில், "எனக்கு 3 மகன்கள், 2 மகள்கள், 8 பேரன்கள், 5 பேத்திகள், 12 கொள்ளுப் பேரன்கள், 6 கொள்ளுப் பேத்திகள் உள்ளனர். இதில் 6-ஆவது தலைமுறையாக ஒரு எள்ளுப் பேரனும் இருக்கிறார். உடல் உழைப்புதான் எனது ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணம். ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்ட இருக்கமாட்டேன். 90 வயது வரை நெசவு செய்துவந்தேன். மகன்கள் வேண்டாம் என்று சொன்னதால் அதை விட்டுவிட்டேன். இப்போதும் மனதளவிலும், உடலளவிலும் உற்சாகமாக உள்ளேன். எந்த நோயும் இல்லை.

உறவினர்களுடன் பேச்சியம்மாள்

கம்பு, வரகு, திணை போன்ற தானியங்களைத்தான் பெரும்பாலும் எடுத்துக் கொள்வேன். 100 வயதைக் கடந்தாலும் உறவினர்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்த்தது இல்லை. தற்போது, அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதும் இதுபோன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் " என்றார்.

இந்த விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் பேச்சியம்மாளிடம் ஆசிபெற்றனர். விழாவில் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தங்கள் வாழ்வில் நிகழ்ந்த இனிமையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டதுடன், வள்ளிக்கும்மி தொடங்கி பரத நாட்டியம் வரை உறவினர்கள் ஒன்றுதிரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.