Mammootty: `இதற்காகத்தான் காத்திருந்தேன்! - ஹேமா கமிட்டி விவகாரத்தில் மம்முட்டி
மலையாள திரைத்துறையில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஹேமா கமிட்டியின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகின் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள் பலரும் போலீஸில் தாமாக முன்வந்து பாலியல் புகார்களைப் பதிவுசெய்து வருகின்றனர். மறுபக்கம், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (AMMA), தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாக பதவியில் இருக்கும் அனைவரும் கூட்டாகப் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
முறையாகப் பதிலளித்து நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களே இப்படி மௌனமாக விலகுவதா என்று பலரும் விமர்சித்தனர். இதற்கு மோகன்லால், ``மலையாள திரைத்துறையில் சுமார் 21 அமைப்புகள் உள்ளன. அவைகளிடம் கேள்வி கேட்காமல் `அம்மா அமைப்பிடம் மட்டுமே கேள்வி எழுப்புவது என்ன விதம் எனத் தெரியவில்லை. ஒரு அமைப்பை மட்டும் சிலுவையில் அறைவது சரியல்ல. சினிமாவில் பவர் குரூப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒன்று உள்ளதை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்" என்று நேற்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நாள்முதல் இதில் அமைதியாக இருந்த மூத்த நடிகர் மம்முட்டி, மோகன்லாலின் நேற்றைய விளக்கத்துக்குப் பிறகு, `இதற்காகத்தான் காத்திருந்தேன் என தன் மௌனத்தை உடைத்திருக்கிறார்.
மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில், ``இதுபோன்ற பிரச்னைகளில் நடிகர்கள் அமைப்பே முதலில் பதிலளிப்பது முறை. அந்த வகையில், முறையான பதில்களுக்குப் பிறகு ஒரு உறுப்பினராகக் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று நம்பியதால் இவ்வளவு நாள் காத்திருந்தேன். சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. சமூகத்திலுள்ள நல்லது கேட்டது அனைத்தும் திரைத்துறையில் இருக்கிறது.

திரையுலகம் என்பது சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கும் ஒன்று. அதனால், இந்தத் துறையில் தவறானவை ஏதும் நடக்காத வண்ணம் திரைத்துறையினர் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். அப்படியிருக்க, இதில் நடக்கக் கூடாத ஒன்று நடந்ததையடுத்து, அதன் மீதான நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளைப் பரிந்துரைக்க, திரைத்துறையை ஆய்வுசெய்ய அரசால் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை முழு மனதுடன் ஆதரித்து வரவேற்கிறேன்.
அவற்றை நடைமுறைப்படுத்த திரைத்துறையிலுள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த விவகாரத்தில் இப்போது எழுப்பப்பட்டிருக்கும் புகார்களை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, போலீஸார் நேர்மையாக இதனை விசாரிக்கட்டும். தண்டனைகளை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

மேலும், நீதிபதி ஹேமா, அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சட்டத் தடைகள் இருந்தால் தேவையான சட்டம் இயற்ற வேண்டும்" என்று மலையாளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதோடு இந்தப் பதிவில், ``சினிமாவில் பவர்ஹவுஸ் என்று எதுவும் கிடையாது. சினிமா என்பது இதுபோன்ற விஷயங்கள் இருக்கக்கூடிய களமும் அல்ல. சினிமா உயிர்ப்போடு இருக்க வேண்டும்" என்றும் மம்முட்டி தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


