வேலூர்: இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ-க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்.பி நடவடிக்கையும், பின்னணியும்!
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் எஸ்.ஐ குமார், எஸ்.எஸ்.ஐ கோபிநாத் ஆகிய 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்திருக்கிறார் எஸ்.பி மதிவாணன். இந்த நடவடிக்கையின் பின்னணிக் குறித்துப் பேசுகிற போலீஸார் ``வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பாக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான 25 வயது இளைஞன் பிரேம்குமாரை காதலித்துவந்திருக்கிறார். இருவரும் நெருங்கிப் பழகினார்கள். அடிக்கடி தனிமையிலும் சந்தித்துக்கொண்டார்கள். திருமணம் மீறிய உறவில் இருவரும் இருந்தபோது, இளம்பெண்ணுக்கே தெரியாமல் செல்போனில் வீடியோ ரெக்கார்ட்டும் செய்திருக்கிறார் பிரேம்குமார்.
இந்த நிலையில், பிரேம்குமாருக்கு இன்ஸ்டாகிராமில் தஞ்சாவூரைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், தனது காதலியுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார். இன்ஸ்டா தோழியுடன் காதலன் பேசுவதை கண்டுபிடித்த இளம்பெண் ஆத்திரப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, இருவரிடையேயும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. கோபப்பட்ட பிரேம்குமார் `உன்னை திருமணம் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. நாம் தனிமையில் இருந்த வீடியோ என்னிடம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஷேர் செய்து உன்னையும், உன் குடும்பத்தையும் சேர்த்து அசிங்கப்படுத்திவிடுவேன். என்னை தொந்தரவு செய்யாதே...’ என மிரட்டினாராம்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைப் பெற்று இளம்பெண் நலமுடன் வீடு திரும்பிய பிறகு வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். ஆனால், பிரேம்குமார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர். இதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சமூக நலப்பாதுகாப்புத் துறையில் புகாரைப் பதிந்திருக்கின்றனர். அதன் பிறகே, இளைஞர் பிரேம்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதே வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பினர் முனீஸ்வரன் கோயில் திருவிழா தொடர்பாக மோதிக்கொண்டார்கள். வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 30-ம் தேதி, கோட்டாட்சியர் கவிதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த எல்லப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டதை தடுக்க போலீஸார் ஒருவர்கூட அங்கு இல்லை. இந்த விவகாரத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் வேப்பங்குப்பம் போலீஸார் தவறிவிட்டார்கள். இந்த 2 சம்பவங்களிலும் அலட்சியம் காட்டியதன் விளைவே வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, எஸ்.ஐ-க்கள் குமார், கோபிநாத் மீது `ஒழுங்கு’ நடவடிக்கை எடுக்கக் காரணம்’’ என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


