Hema Committee: நான் ஓடி ஒளியவில்லை; அம்மா சங்கம் மட்டும் பொறுப்பாகாது! - மோகன்லால் சொல்வதென்ன?
மலையாளத் திரையுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 233 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை நீதிபதி ஹேமா தலைமையிலான குழு வெளியிட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது.
பல பாலியல் குற்றச்சாட்டுகள் இந்த அறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவர் பதவியை முன்னணி நடிகர் மோகன் லால் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சங்கத்திலிருந்த 17 நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை மோகன் லால் ராஜினாமா செய்திருக்கக்கூடாது என்றும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த கேரள கிரிக்கெட் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் லால் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை, இங்குதான் இருக்கிறேன். தற்போதைய பிரச்னைக்கு மலையாள திரைப்பட சங்கம் (அம்மா) மட்டுமே காரணம் கிடையாது.
எங்களை மட்டுமே குறை சொல்வதில் நியாயமில்லை. மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கம் மட்டுமே எப்படி பொறுப்பேற்க முடியும்? மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ஹேமா கமிட்டி அறிக்கையை நான் வரவேற்கிறேன். விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். மலையாளத் திரையுலகில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாது. பாலியல் புகார் தொடர்பாக அரசு தன் கடமையைச் செய்யும் என்று நம்புகிறேன்." என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


