Millionaire Dog: ரூ.3300 கோடி சொத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழும் நாய்... சுவாரஸ்ய பின்னணி!

கந்தர் VI ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய். சாதாரண நாய் அல்ல, பெரும்பாலான மனிதர்களின் கனவு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நாய்.

ரூ.3300 கோடி சொத்து மதிப்புடன் கவனித்துக்கொள்ள 27 வேலையாட்கள், விதவிதமான இறைச்சிகளைத் தயாரிக்க சொந்தமாக ஒரு செஃப், பயணம் செய்ய சொகுசான பி.எம்.டபிள்யூ கார், அதன் ட்ரஸ்ட் பெயரில் பிரைவேட் ஜெட், வசிக்க மாளிகை, யாரையும் காவல்காக்கவும், மனிதர்களுக்கு உதவவும் கூட அவசியம் இல்லாத கோடீஸ்வரர்களும் பொறாமைகொள்ளும் வழ்ழையை அனுபவிக்கிறது இந்த நாய். இத்தனை அபரிமிதமான சொத்துக்கள் இந்த நாய்க்கு எங்கிருந்துதான் வந்திருக்கும் என தெரிந்துகொள்ள ஆர்வம் கொள்வது இயல்புதான்...

Mourizia Mian with Gunther Dog

அதைத் தெரிந்துகொள்ள கந்தர் VI பிறப்பதற்கு முந்தைய காலத்துக்குச் செல்ல வேண்டும். 1992-ம் ஆண்டு கார்லோட்டா என்ற பணக்கார பெண்மணி தனது மகனின் இறப்புக்கு பிறகு, 80மில்லியன் டாலர்கள் சொத்தையும் தனது செல்லப்பிராணியான கந்தர் III என்ற நாய்க்குடிக்கு விட்டுச் செல்கிறார். சொத்தை கவனித்துக்கொள்ள இத்தாலிய தொழிலதிபரும் தனது குடும்ப நண்பருமான மொரிசியோ மியான் என்பவரை ட்ரஸ்டியாக நியமிக்கிறார். கார்லோட்டா விட்டுச்சென்ற 80 மில்லியன் டாலர் மொரிசியோ மியானின் நிர்வாகத்தால் 400 மில்லியன் டாலராக (ரூ.3300 கோடி) பெருகியுள்ளது.

நாயின் வாழ்க்கைமுறையும் அதன் பின்னணி கதையும் சுவாரஸ்யமாக இருந்தாலும் இதில் ரகசியமான முடிச்சு ஒன்று இருக்கிறது. குந்தர் III, தற்போது சொத்துக்களை நிர்வகிக்கும் மியானின் காதலியின் நாய். மியானின் குடும்பச் சொத்துக்கள் நாயின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளையில் மாற்றப்பட்டது. இப்படிச் செய்வதன் மூலம் நாய் சொத்துக்கு உரிமையாளராகவும், மியான் அதனை நிர்வகிப்பவராகவும் (அனுபவிப்பவர்) ஆகிறார். இத்தாலி அரசின் வரிவிதிப்பில் இருந்து தப்பவே இப்படி ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார் தொழிலதிபர் மொரிசியோ மியான்.

Gunther VI

அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு என்ற வடிவேலு வசனம் போல, மியானின் சாமர்த்தியமான கட்டுக்கதையால் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வருகிறது கந்தர் நாய். இதனை உலகின் பணக்கார நாயாக கின்னஸ் உலக சாதனைகள் அங்கீகரித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸில் இந்த நாயின் வாழ்க்கைமுறைக் குறித்து ஆவணப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. பணம் தான் பலம் என இயங்கும் நம் உலகில், இனி விலங்குகளுக்கு ராஜா சிங்கம் இல்லை, இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்தான்!

கந்தர்ஸ் மில்லியன்ஸ் ட்ரைலர் உங்களுக்காக...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.