அன்று தெருவில் பிச்சை, சாலையோரம் உறக்கம்... இன்று ஒலிம்பிக் பதக்கம் - சாதித்த சுலேகா!
மகாராஷ்டிரா மாநிலத்தில், தெருவில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று சாதித்துள்ளார். எவ்வளவுதான் பிரச்னைகள் வந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருப்பவர்கள் கட்டாயம் சாதித்துக் காட்டுவார்கள் என்பதற்கு, சுலேகா ஷேக் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆதரவற்றவரான சுலேகா ஷேக், தன் 8 வயதில் நாக்பூர் நெடுஞ்சாலையில் விபத்து ஒன்றில் சிக்கினார். காலை இழந்த அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு, அவர் குழந்தைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கிருந்து, அனிகேத் சேவாபாவி சன்ஸ்தா நடத்தும் மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். முன்னதாக, அவருக்குத் தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு, கடைசியில்தான் அனிகேட் சேவாபாவி மையத்தில் இடம் கிடைத்தது.
இத்தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கல்பனா இது குறித்து கூறுகையில், சுலேகாவை ஆரம்பத்தில் எந்த தொண்டு நிறுவனமும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. கடைசியில் எங்களிடம் வந்தார். ஆரம்பத்தில் வாழ்த்து அட்டை தயாரித்தல், பெயின்டிங் போன்றவற்றில் கவனம் செலுத்தினார். அவர் மனதளவில், உடலளவில் உற்சாகமாக இருந்தார். அதனை பயன்படுத்த முடிவு செய்தோம். அவரை விளையாட்டில் ஈடுபட ஊக்கப்படுத்தினோம். நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், பேட்மின்ட்டன், வாலிபால் போன்ற விளையாட்டுகளில் அவர் ஆர்வம் காட்டினார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சுலேகாவின் உடற்பயிற்சி ஆசிரியர் அசோக் ராமச்சந்திரா இது குறித்து கூறுகையில், ’’மாணவர்கள் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தபோது அதனை பார்த்துக்கொண்டிருந்த சுலேகா, தானும் இந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டார். நான் அவரிடம், விளையாடத் தெரியுமா என்று கேட்டேன். ’தெரியாது, ஆனால் கற்றுக்கொண்டு விளையாட விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார். இதையடுத்து அவருக்குத் தீவிர பயிற்சி கொடுத்தோம்.
இதனால் பஞ்சாப், ஜார்க்கண்ட், குஜராத், கொல்கத்தா போன்ற இடங்களில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார். இதனால் அபுதாபியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றார் என்றார்.

இது குறித்து சுலேகா ஷேக் கூறுகையில், எனது ஆரம்பக் காலத்தில் தெருக்களில் பிச்சை எடுத்து, அதில் வடாபாவ் வாங்கிச் சாப்பிட்டு, தெருவோரம் படுத்து உறங்கி வாழ்க்கையை கழித்துக்கொண்டிருந்தேன். விபத்தில் காலை இழந்த பிறகு இந்த மையம்தான் எனது வீடாக மாறியது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டாலும், நான் ஆதரவற்று இருந்ததால் அதற்கான ஆவணங்களைப் பெற ஆறு மாதங்கள் சிரமப்பட்டேன். அபுதாபிக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறிய தருணத்தை என்னால் மறக்கமுடியாது. தங்கப் பதக்கம் பெறுவதுதான் எனது கனவு. ஆனால், சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் என்னால் மேற்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. எனக்கு வாழ்வு கொடுத்த மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டுள்ளேன் என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

