IPL 2025: மெகா ஏலத்தில் ரோஹித் ஷர்மாவைக் குறிவைக்கிறதா லக்னோ? - உரிமையாளர் சஞ்சீவ் விளக்கம்
ஐ.பி.எல்-இல் தங்கள் அணிகளுக்குத் தலா 5 கோப்பைகளை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்தாண்டு இறுதியில் நடக்கும் மெகா ஏலத்தில் கொண்டுவரப்படுவார்களா அல்லது சொந்த அணிகளால் தக்கவைக்கப்படுவார்களா போன்ற எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போதே பற்றிக்கொண்டன. அதிலும் குறிப்பாக ரோஹித் ஷர்மா. கடந்த ஆண்டு ஐ.பி.எல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கி ரோஹித் ஷர்மாவை ஒரு வீரராகக் களமிறக்கியதே காரணம்.
இதனால், ரோஹித் ஷர்மா ஏலத்தில் விடப்படுவாரா எனப் பல அணிகளும் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகிய நால்வரையும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த நிலையில், ஐ.பி.எல் ஏலத்தில் ரோஹித் ஷர்மாவை வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.50 கோடி ஒதுக்கியிருப்பதாகப் பரவும் தகவல்களுக்கு அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பதிலளித்திருக்கிறார். ஊடக நேர்காணல் ஒன்றில், சஞ்சீவ் கோயங்காவைப் பேட்டியெடுத்த பத்திரிகையாளர் ஒருவர், சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பேச்சுகள் அடிபடுகிறதே, அது உண்மையா எனக் கேள்வி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சஞ்சீவ் கோயங்கா, "ரோஹித் ஷர்மா ஏலத்துக்கு வருவாரா, இல்லையா என்பது யாருக்காவது தெரியுமா? உங்களின் ஏலத்தொகையில் 50 சதவிகிதத்தை ஒரு வீரருக்குப் பயன்படுத்தினால், மற்ற 22 வீரர்களை எப்படிச் சமாளிப்பீர்கள்?" என்றார். அதன்பிறகு, "அப்படியென்றால் ரோஹித் ஷர்மா உங்களின் விருப்பப் பட்டியலில் இருக்கிறாரா?" என்று பத்திரிகையாளர் மீண்டும் கேள்வி கேட்டார்.
அப்போது, "எல்லோருக்குமே ஒரு விருப்பப் பட்டியல் உள்ளது. உங்கள் அணியில் சிறந்த வீரர், சிறந்த கேப்டன் இருக்க வேண்டும். உங்களிடம் என்ன இருக்கிறது, அதை வைத்து என்ன செய்யலாம் என்பதுதான் விஷயம். எந்தவொரு வீரரையும் ஏலம் எடுக்க நான் விரும்பலாம். அனைத்து அணி உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும். ஆனால், உங்களால் அனைத்து வீரர்களையும் பெற முடியாது." என்று சஞ்சீவ் கோயங்கா கூறினார்.
ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 100 முதல் 120 கோடி ரூபாய் வரை வீரர்களுக்குச் செலவிடலாம் என்று வரம்பு விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


