Skoda: கார் பேரைச் சொல்லும் போட்டி; லாஞ்ச் ஆவதற்கு முன்பே பரிசு; கேரள இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்
கார்/பைக் நிறுவனங்கள் வித்தியாசமாக ஏதாவது போட்டி வைக்கும். டிவிஎஸ் - டிசைன் சம்பந்தமாக வைப்பார்கள். மஹிந்திராவில் ஆஃப்ரோடு சம்பந்தமாக வைப்பார்கள். அப்படி ஸ்கோடா நிறுவனம் கொஞ்ச நாள் முன்பு, ‛தங்களுடைய அடுத்த காரின் பெயருக்கான லிஸ்ட்டைக் கொடுங்கள்’ என்று #NameYourSkoda எனும் பெயரில் தேசிய அளவில் மக்களுக்குப் போட்டி வைத்திருந்தது.
K-ல் ஆரம்பித்து Q எழுத்தில் முடிய வேண்டும் என்பதுதான் விதி. இதைத் தொடர்ந்து ஸ்கோடாவுக்குப் பெயர்கள் குவிந்தன. இப்போது அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் வெளிவரப் போகும் காரான Kylaq எனும் பெயரைச் சரியாகச் சொல்லி, அந்தக் காரை பரிசாக வெல்லப் போகிறார், கேரளாவைச் சேர்ந்த முகமது ஜியாத் என்பவர்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் குரான் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முகமது ஜியாத், இப்போது ஸ்கோடா Kylaq காரின் இந்தியாவின் முதல் வாடிக்கையாளர் எனும் பெருமையைப் பெறப் போகிறார்.
போன பிப்ரவரி மாதம் இந்தப் பெயர்களுக்கான ஓட்டெடுப்பு நடந்தது. அதில் Kariq, Kylaq, Kayaq, Karmiq, Kliq, Kyroq, Kosmiq, Kwiq என்று ஏகப்பட்ட பெயர்கள் ஷார்ட்லிஸ்ட்டில் இருந்தன. அதில் கடைசியாக 5 பெயர்கள்; அதிலிருந்து கைலக் என்கிற பெயர்தான் ஸ்கோடா மூலம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, போன வாரம் முகமது ஜியாத்துக்கு ஒரு போன் கால். ‛‛நீங்க கார் ஜெயிச்சிருக்கீங்க; நம்ப முடியலையா?’’ என்று ஸ்கோடா எக்ஸிக்யூட்டிவ்விடம் இருந்து சீண்டப்பட்டதாம். ப்ராங்க் கால் என்று முதலில் நம்பாத ஜியாத், ஸ்கோடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்த்த பிறகுதான், தான் போட்டியில் ஜெயித்து கார் வெல்லப் போவதை அறிந்து சந்தோஷத்தில் திளைத்திருக்கிறார்.
இதில் முகமது ஜியாத்துடன் இன்னும் 10 பேருக்கும் பரிசு காத்திருக்கிறது. அந்தப் பரிசு என்னவென்றால், ஸ்கோடாவின் தலைமையகம் இயங்கும் செக் குடியரசின் தலைநகரான Prague -க்கு ஓர் அற்புதமான ட்ரிப் அழைத்துச் செல்லயிருக்கிறது ஸ்கோடா.
‛‛கார் வாங்கும் அளவுக்கெல்லாம் எனக்கு நிதிநிலைமை கிடையாது. ஆனால் கார் வெல்லப் போவது மகிழ்ச்சியை அளிக்கிறது.’’ என்று சொல்லியிருக்கிறார் முகமது ஜியாத்.
சப் 4 மீட்டர் பிரிவில், அதாவது காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் வெளிவரப் போகும் கைலக் காரின் டெஸ்ட் டிரைவ் இப்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் போன்ற காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாக வரப் போகிறது கைலக்.
And the winners are…
— Škoda India (@SkodaIndia) August 21, 2024
Congratulations to all 10 fans who have won an exciting trip with Škoda Auto India to Prague. Pack your bags and DM us for further correspondence. #SkodaIndiaNewEra pic.twitter.com/LLAv46m0L8
ஸ்கோடாவின் குஷாக், ஸ்லாவியா கார்கள் தயாராகப் போகும் MQB A0 IN என்கிற ப்ளாட்ஃபார்மில்தான் இது தயாராகப் போகிறது. 1.0 TSI பெட்ரோல் இன்ஜினுடன் - மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இதில் இருக்கும்.
ஸ்கோடா கார் யாராச்சும் வாங்கப் போறீங்கன்னா கொஞ்சம் காத்திருங்க!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


