கோத்தகிரி: அரசு பேருந்தில் இறைச்சி பொட்டலம்... சிக்கிய வேட்டைக் கும்பல் - என்ன நடந்தது?
சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற அரசு பேருந்தில் இருந்த பயணிகளையும் சோதனை செய்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவரின் பையில் பொட்டலம் ஒன்று இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். திறக்கச் சொல்லி பார்த்தபோது வித்தியாசமான நிறத்தில் இறைச்சி இருந்ததைக் கண்டு விசாரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்து வருவதாகவும்... அப்போது அந்தப் பகுதியில் நடமாடிய கடமான் ஒன்றை சக தொழிலாளர்களுடன் சேர்ந்த வேட்டையாடி இறைச்சியை பங்கிட்டுக் கொண்டதாகவும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து உடனடியாக நீலகிரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபரை நீலகிரிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த நபர் கூறிய தகவலின் பேரில், கடமான் வேட்டையில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்து, அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த நீலகிரி வனக்கோட்ட அதிகாரிகள், "ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் சிலர் கோத்தகிரி அருகில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

அப்போதுதான் கூட்டாகச் சேர்ந்து கடமான் ஒன்றை இறைச்சிக்காக வேட்டையாடியுள்ளனர். 15 பேரையும் கைதுசெய்துள்ளோம். இதற்கு முன்பிருந்தே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


